--- uuid: a8d8e0cf-1c18-4634-be5b-a67d0af6c8e7 title: கடுகின்_வாரிசு --- # கடுகின் வாரிசு மருதமுத்து சற்று கடுப்புடனேயே மொப்பெட்டிலே வந்து கொண்டிருந்தார். வண்டி சீட்டுக்கடியில் இருந்த ஒரு லட்ச ரூபாய் பணம் துச்சமாய் தெரிந்தது. பணத்தால் எதையும் வாங்க முடியும் என்கிறார்கள் முட்டாள்கள். ஒரு காளை வாங்க முடியவில்லை. பின் அவரை அவரே திட்டிக்கொண்டார். இருந்த காளையை விட்டுவிட்டு இப்போது ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருக்கிறார். அந்த காளை அவருக்கு வந்து சேர்ந்த போது ஆறுமாத கன்று. அவர் பெண் முத்துமாரி பன்னிரண்டாவது படித்துக் கொண்டிருந்தாள். கொரோனா காரணமாக வீட்டில் இருந்தாள். கொரோனா வறுமையில், கடன் கேட்ட கோனாரிடம் வெறும் எட்டாயிரம் சொல்லி ஒன்பதாயிரத்திற்கு பிடித்தார். கன்று ஊறி பிறந்ததால் மாடு தப்பிக்கவில்லை. காலேஜ் மாட்டுப்பால் தந்து வளர்த்திருந்தார்கள். நல்ல கருப்பாய், உருண்டாயாய் இருந்ததது. முத்துமாரிதான் கடுகு என்று பெயர் வைத்தாள். அவள் அரவணைப்பில் ஆறு மாதத்தில் ஆளுயரம் வந்துவிட்டது. கொரோனாக் காலம் முடிந்தது, காளைக்கு அடிதுடி ஆகி விட்டது. காராம் பசுவுக்கு ஆசைப்பட்டு காரிக்காளை தேடி வந்தனர். அவர் பெயரே காரிக் காளைக்காரர் என்று மாறிவிட்டது. காளை சேர்க்க அன்றாடம் பத்து பேர் வந்தார்கள். அவர் மூன்றுக்கு மேல் சேர்ப்பதில்லை. தினமும் மூவாயிரம் ரூபாய் வந்தது, காளைக்கு தீவனச் செலவு போக இரண்டாயிரம் நின்றது. அந்தக்காசில் முத்துமாரிக்கு கல்யாணத்தில் ஐந்து பவுன் சேர்த்தி போட்டார். வருடம் கழிய கழிய காராம் பசுவுக்கு மார்க்கெட் போனாலும், கடுகின் வாரிசுகள் வண்டி ரேசில் பெயர் வாங்கின. ஆனால் கடுகு போன வருடம் குன்றி போனது. வண்டிமாட்டுக்கு கூட போகது போல இருந்தது. வியாபாரிக்கு அடிமாட்டுக்கு தள்ளி விடலாம் என்று யோசித்தார். பிரசவத்துக்கு வந்த முத்துமாரி பொரிந்து தள்ளிவிட்டாள். "இந்த ஆம்பளகளே தாந்தின்னிகதான் எவ்வளவுதான் உழச்சுக் கொட்டுனாலும் அவுங்கவுங்க சவுரியம்தான் பெரிசு. காளயா இருந்த என்ன கட்டுன பொண்டாட்டியா இருந்தா என்ன." என்று அவள் வீட்டுக்காரனையும் சேர்த்து வைத்து வசைபாடினாள். அவள் வந்த பின் காளை கொஞ்சம் தேறியது. மூன்று மாதத்தில் அவளுக்கு பையன் பிறந்தான். அவள் இருந்த ஆறுமாதமும் கடுகு நன்றாக தேறியது. குழந்தை சோறுட்ட கடுகு இல்லாமல் வேலை ஆகவில்லை. அவளுடனயே காளையை தாட்டிவிடலாம் என்று யோசித்தார். கிழட்டு காளையை தருவதா என்று நினைத்துவிட்டு. ஒரு செவல மாடு கறவையாக வாங்கி தந்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டார். அவளும் புகுந்த வீடு போய் சேர்ந்தாள். அவள் போய் ஒரு மாதம் கழிந்து மருமகன் ஒரு மாட்டை பிடித்துக் கொண்டு வந்தான் போலி சேர்க்க வேண்டும் என்று. மருதமுத்துவுக்கு யோசனையாய் இருந்தாலும் காளை தேறிவிட்டதே என்று ஒத்துக் கொண்டார். போலி சேர்த்த அன்று கடுகு நன்றாகவே இருந்தது. மறுநாள் காலை 7 மணிக்கு 'ம்ம்மாவ்' என்ற சத்தமும் தொடர்ந்து 'தொப்' என்ற சத்தமும், அவர் சம்சாரத்தின் ஐயோ என்ற சத்தமும் கேட்டு ஓடி வந்த போது கடுகு பாறை போல் விழுந்து கிடந்தது. டாக்டர் வந்து பார்த்துவிட்டு அட்டாக் என்று விட்டு போய்விட்டார். முத்துமாரிக்கு சொல்லி விட்டார். அவள் வந்து சபிக்காத குறையாக மாமனாரையும் மருமகனையும் அழுது புலம்பி ஏசினாள். அவள் அம்மா "காளை தானே போச்சு, வயசாகி போனதுக்கு யாரு என்ன பண்ண முடியும், வேற வாங்கிட்டா போச்சு. அதுக்கு என்னாமோ இந்த குதி குதிக்கிற" என்று கடி கடித்தபின் அடங்கினாள். "அது எனக்கு தெரியாது பதனோராம் மாசம் என் பயனுக்கு மொட்ட அடிக்கறுக்குள்ள எனக்கு ஒரு காரி மாடு வேணும்" என்றாள் மாரி. மருதமுத்து வாயில் சனி "அவளோதானே எத்தன காளை ஜெயிச்சுருக்கு அவங்கிட்ட கேட்டா கிடைக்காதா என்ன? " "ம்ம் ம்ம் காள வில அருபது எழுபது ரூபா வரும், பொலி சேர்த்துனா சும்மா காளை கொடுப்பாங்களாக்கும்" என்றாள் மாரி. "அதெல்லாம் பார்த்துக்குலாம்" என்றார் மனசுக்குள்ளே கருக்கு என்றிருந்தாலும். அன்னைக்கு தொடங்கியது தான் இந்த அலச்சல். " ஒவ்வொருத்தானும் கடுகு செத்து பொனதா துக்கம் விசாரிச்சானே தவிர மாட்டு நாயமே பேசுல. ஒருத்தன் மட்டும் வேணும்னா ஒரு மாட்ட புடிச்சிட்டு வந்து பொலி சேர்த்திங்குங்க, காசெல்லாம் வேண்டாம் ஆனால் அவன் காளை செவலக் காள. எப்படி காரிக்காளை சேர்த்தி செவலக் காள வருதோ" என்று மனதுக்குள் புலம்பினார். காரியப்பட்டி டீக்கடையில் வண்டியை நிறுத்திய போது, தெரிந்த குரல் கேட்டது. "மருது என்ன இந்தப்பக்கம் ? " திரும்பி பார்த்தால் டிராக்டர்கார அண்ணன் நின்று கொண்டிருந்தார். அந்த வட்டாரத்திலேயே முதலில் டிராக்டர் வாங்கி ஓட்டியவர். வயது எழுபத்தைந்துக்கு மேல் இருக்கும். சில நாள் முன்பு வரை தரகு வேலையும் பார்த்து வந்தார். நிலம் நீச்சு, மாடு கன்று, தெரிந்த குடும்பம் என்றால் கல்யாண தரகும் பார்ப்பார். "அண்ணா சவுக்கியமா" என்று பரஸ்பரம் விசாரித்த பின், பக்கதுல தான் சாலை வா போகலாம் என்று அழைத்துப் போனார். பழைய ஓட்டு வீடு வெறிச்சோடியிருந்தது. "ஏண்ணா ஒருத்தரையுன் காணோம்" என்றார் மருதமுத்து. "அவ போய் நாலு வருசம் ஆச்சு, பசங்க பூராம் மாமியா வீட்டுல. முதல்ல பெரியவன் சண்ட போட்ட மாரி ஓடுனான். சின்னவன் நான் மட்டும் இளிச்சவாயனானு ரெண்டாம் மாசமே ஓடிட்டான். பக்கத்துல தங்கச்சி வீட்டுல இருந்து குழம்பு வரும். சோரு நான் வச்சிக்கிறேன். சொத்து நினச்சு ஒத்த புள்ளயா இருக்கற வீட்டுல பொண்ணு கட்டுனோதட பலன். அம்மாக்காரிய இருந்தாக் கூட கூட்டிட்டு போய் வச்சிகினுவாங்க. நம்மள ?" என்று கூறி சிரித்தார். "உன் பொண்ணு எப்படி இருக்கிறா " என்றார். "அவளுக்கென்ன" என்ற மருதமுத்து அவர் கதையை சொன்னார். "இப்போ தரகு பாக்குறீங்களா" என்றார் சன்னமாக. அதற்கு சிரித்த அவர், "எல்லாம் விலவாசி ஏறிபோச்சு, அன்னிக்கு உழவோட்ட, குழந்தக்கு பாலுக்கு மாடு பிடிச்சோம் வாங்குனோம். இப்ப ரேசுக்கு தானே வாங்குறாங்க. பசுவா கேக்குறாங்க பால் கொடுக்குற மெஷினா கேக்குறாங்க. ஒரு நாளைக்கு இருபத்தஞ்சு லிட்டர் கேக்குறாங்க, மாடு தாங்குமா. நிலம் வாங்குறவன் அதுக்கும் மேல சம்பாரிக்க நிலம் வாங்குல. சம்பாரிச்சத பதுக்க நிலம் வாங்குறான். கல்யாணத்த பத்தி பேசவே வேண்டாம். என்னமோ எல்லாம் படிச்சா சமூகம் மாறிடும் சமத்துவம் வந்திடும் அப்படினாங்க, இப்ப புள்ளக பூராம் படிச்சிருக்கு ஆனா பசங்க படிக்க மாட்டிறாங்க. இதுல போய் எங்க சோடி சேர்க்கறது." அப்ப "ம்ம்மா" என்னும் குரல் சாளைக்கு பின்னால் இருந்து கேட்டது. மருதமுத்து அதிர்ந்து போனார் அப்படியே கடுகின் குரல். "ஏண்ணா காளைங்களா" என்றார். "இல்லியப்பா கடேரி, என்ற தங்கச்சியோடது உன்ற காளைகிட்ட பொலி சேர்ந்ததுதான். ரெண்டாம் ஈத்து பயிராயிருக்கு, மேவில்லனு இங்க கொண்டாந்து கட்டியிருக்கறாஙக. தண்ணி வெக்க நேரமாச்சு அதுக்கு கத்தது. இனி வேசதான அதனால விலை கடச்சா விக்க சொன்னாங்க. காளைக்கு இத்தன பய வரான் ஆனா கடேரிக்கு வர மாட்டிங்குறான். சோம்பறி பயலுக." "இரப்பா ஒரு நிமிஷம் வாரேன்" என்று எழுந்தார். பின்னாலேயே போனார் மருதமுத்து, அப்படியே கடுகின் நிறம் வளர்த்தி கூட இருந்தது. குனிந்து மடியை பார்க்காவிட்டால் காளை என்றுதான் சொல்ல வேண்டும். மருதமுத்திவின் மனதில் கடைசி இருபது நிமிட பேச்சு ஒடியது. இதுதான் கடுகின் வாரிசு என்று அவர் மனம் உறுதிபட்டது. "அண்ணே நானே பிடிச்சுகிறேன்" என்றார். "நீ காள கேட்டியேப்பா." "இல்லனே இதயே பிடிச்சுக்கிறேன்" என்றார். கடகடவென வேலை நடந்தது. எழுபத்தைந்தாயிரத்துக்கு முடித்தார். வண்டி பிடித்து வீடு போன போது இருட்டாகிவிட்டது. சம்சாரம் பொரிந்தாள் "காள மாட கேட்டா பசுவ பிடிச்சிட்டு வந்திரிக்கிங்களே உங்களுக்கு அறிவிருக்கா. அந்த ஆங்காரி என்ன குதிகுதிப்பாளோ.". மருதமுத்து ஒன்றும் பேசவில்லை. இரண்டு நாள் கழித்து "மொட்ட அடிக்க நாள் குறிச்சாச்சு" என்று வந்த முத்துமாரி மாடு வாங்கியாச்சா என்று கேட்டாள். "உங்க அய்யன் வாங்கிறுக்க அழக நீய்யே போய் பாரு" போய் பார்த்துவிட்டு வந்த மாரி "எந்த கன்னு போட்டாலும் நானே பிடிச்சுக்கறேன்" என்று விட்டு போய்விட்டாள். மருதமுத்து சம்சாரத்தை பார்த்து சிரித்தார். "உங்க வாரிசாச்சே, அப்பனுக்கு புள்ள தப்பாம பிறந்திருக்கு" என்று கூறியவாறே உள்ளுக்கு போனாள். மருதமுத்து இன்னமும் சிரித்துக் கொண்டிருந்தார். \--முற்றும்-- ​