--- title: யான் பெற்ற அனுபவங்கள் - குமாரி மோனா date: 2013-08-10T00:00:00.000Z categories: - தொடர்-கதை uuid: 0c2e4167-cc27-48ba-9038-f5bcfe9328de --- நான் வேலைக்கு சேர்ந்து,  மூன்று மாதங்கள் ஆயிருந்தது.   காலையில் கூட்டம் அதிகமாயிருக்கும் போது வேலை கொஞ்சம் பளுவாய் இருக்கும், பின் சாயும்காலம் வரை வேலை இருக்காது.   அந்த நேரத்தை கொல்லுவதற்காக, கையில் கிடைத்த புத்தகம் எல்லாம் படிப்பேன்.  அப்படித்தான் சித்தர் பாடல் படித்துக் கொண்டிருந்தேன்.  ஒன்றும் பெரிதாக விளங்கவில்லையெனினும் புரட்டிக் கொண்டிருந்தேன். "_முட்டற்ற மஞ்சளை யெண்ணெயிற்கூட்டி முகமினுக்கி_ _மெட்டிட்டுப் பொட்டிட்டுப் பித்தளையோலை விளக்கியிட்டு **…**_" 'சார்', நிமிர்ந்து பார்த்தேன், ஒரு தாணாக்காரர்(போலீஸ்காரர்) வெளியில் நின்று கூண்டுக்குள் எட்டி பார்த்துக் கொண்டிருந்தார்.   'கொஞ்சம் இப்படி வாங்க' ,அவர் 'மீசை' சிரித்தது,  புத்தக நுனியை மடித்து வைத்து விட்டு எழுந்து போனேன். 'எனக்கு இன்னைக்கு 'பஸ் ஸ்டாண்ட் டியூடி' 'இந்த பொண்ணு ஒரு விட்னஸ் சார், அது தான் சார் முந்தா நாள் நாடக கொட்டாய் எரிஞ்சு போச்சே, அந்த கேஸ் தான் சார். ஊர விட்டு ஓட பார்த்துருக்கு போல,  'பஸ்'லயே மயக்கம் போட்டு விழுந்துருச்சு', 'ரெண்டு இட்லி வாங்கி கொடுத்துருக்கேன்,  நம்ம கூண்டு இன்னும் ரெடி ஆகல,  கொஞ்ச நேரம் இங்க இருக்கட்டும் சார், நான் வண்டி எடுத்துட்டு வந்து கூட்டிட்டு போறேன்' ,  'பாத்துகிறீங்களா', அவர் துறைக்கே உரிய வறண்ட குரலில் கேட்டார்.  'சரி சார், நான் பாத்துக்கிறேன்'. 'போம்மா உள்ள', 'சாட்சி கிடைக்கறதே பெரிய விஷயம் இதுல நீ வேற கழுத்தறுப்பு', 'ஐயாவ தொந்தரவு பண்ணாதே', 'திரும்ப ஓடிட மாட்டியே', நம்பிக்கை இல்லாமல் பொரிந்து கொண்டே பெஞ்சோடு சேர்த்து காப்பிட்டு விட்டு சென்றார். நான் அதற்கப்புறம் சித்தர் பாடலை தொடவில்லை.  பார்ப்பதற்கு மலையாள பெண் போலிருந்தாள், கருநிறம் என்றாலும் களையாகதான் இருந்தாள், வயது இருபது இருக்கும்.  சுருள் முடி, எண்ணை தேய்த்து அடக்கி சீவ முயற்சி செய்ததில் கருநாகம் போல மின்னிக் கொண்டிருந்தது.  நாகம் போலவே நீட்டம்.  ஆனால் 'மேக்கப்' கொஞ்சம் தூக்கலாக இருந்தது. "உன் பேர் என்ன?", சிரிக்காமல் கேட்க நினைத்தேன், என்னையும் அறியாமல் இளித்து விட்டேன்.   "மோனா சாரே" என்று தமிழை கொஞ்சினாள்.  காலைப் பேப்பரில் படித்த ஞாபகம் வந்தது.   ஒரு வாரமாக 'பாய்ஸ் ஹைஸ்கூல்' மைதானதில் கூடாரம் அடித்து நாடகம் போட்டு கொண்டு இருந்தார்கள்.  நானும் போய் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.  நேற்று முன்தினம் எப்படியோ கொட்டாய் தீப்பிடித்து விட்டது என்றும் அதில் கூடாரமே முழுவதும் எரிந்து போய் விட்டது என்றும் போட்டிருந்தது. நாடக கொட்டாயின் முதலாளி 'காளிங்கராயன்',  'குமாரி மோனா'  என்னும் நாட்டியக்காரி மேல் சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தார்.   கொட்டாய் எரிந்து போன தினத்திலிருந்து அவள் காணாமல் போய்விட்டதால், என்பதால் 'போலீஸாரும்' அவள் மேல் சந்தேக பட்டனர்(இது பத்திரிக்கையின் யூகம்).   நான் என் குரலை கட்டை படுத்திக் கொண்டு "ஏம்மா பாத்தா சின்ன பொண்ணா இருக்கே, எதுக்குமா தீ வெச்சே". அதற்கு அவள் 'சலங்கை' சிதறியது போல் ஒரு சிரிப்பு சிரித்தாள், என் மனமும் சிதறி விட்டது.  "சார்க்கு என்னே கண்டால் களியல்லே", "ஞான் தீ வச்சில்லே சாரே, ஆயாள் 'காளிங்கன்' பறயனது அத்தரையும் கள்ளம் சாரே", என்று  முகம் வாடினாள். "உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உத்திரம் கொட்டுதடி" என்னும் வரிகள் எனக்கு ஞாபகம் வந்தது.  'உனக்கு எந்த ஊரு?', அதற்கப்புறம் அவள் மலையாளமும் தமிழும் கலந்து சொன்ன அவளுடைய சோக கதையை இங்கே வாசகர்கள் வசதிகேற்ப தமிழில் தருகிறேன்.   அவள் சொந்த ஊர் சித்தூர். அவள் அப்பா ஒரு மரமேறி(கள் இறக்குபவர்),  அளவான வருமானம் ஆனால், ஐந்து குழந்தைகள் இருந்தால் எந்த வீட்டிலும் பஞ்ச பாட்டு வரும். அவள் வீட்டில நான்காவது பெண், இவளுக்கு அப்புறம் ஒரு பையன் முன்னாடி மூன்று பெண்கள்(கேரளாவில் ஆண்களை விட பெண்கள் அதிகம் என்று வாசகர்கள் அறிந்திருக்க கூடும்).  அதனால் அவளுடைய பதினாறாவது வயதிலேயே அவள் சர்க்கஸ் கம்பெனியில் அரை குறை ஆட்டக்காரியாக சேர்ந்து விட்டாள். இரண்டு வருடங்கள் ஆயிற்று. எல்லா ஆட்டக்காரிகளையும் போல புதிதில் இருந்த மவுசு கடந்த ஒரு வருடமாக குறைய ஆரம்பித்திருந்தது. அவளின் கதை இங்கே கொஞ்சம் தடைபட்டது, அவள் பார்வை கூண்டுக்கு வெளியே சென்று வந்தது. அவள் பார்வை சென்ற திசையில் தூரத்தில் கருகரு என ஒரு மலையாளத்தான் நின்று கொண்டிருந்தான். “என்னாச்சும்மா “ என்றேன். “சாரே எனிக்கு மயக்கம் வரானு போல் இருக்கி சாரே, ராவிலே ஒன்னும் களிச்சில்லே சாரே”. பார்க்க மிகவும் பாவமாக இருந்தது.  எனக்கு டீ குடிக்கும் பழக்கம் கிடையாது, பஸ் ஸ்டான்ட் வாசலில் ஒரு டீக்கடை இருந்தது போய் வாங்கி வர வேண்டும்.  சரி இரு போய் ஒரு ‘சாயா’வும் 'பன்'னும் வாங்கி வருகிறேன் என்று கூறி விட்டு புறப்பட்டேன். திரும்பி வரும் போது கூண்டு வாசலில் நான்கு ஐந்து பேர் எட்டி பார்த்து கொண்டு நின்றனர்.  வேகவேகமாக அவர்களை தள்ளி கொண்டு உள்ளே போன போது அதிர்ச்சி அடைந்தேன்.  மோனாவை கட்டியிருந்த பெஞ்ச் உடைந்திருந்தது.   வாசலில் நின்று கொண்டிருந்த ஒருவன் 'இப்பத்தான் சார் ஆனை வண்டி ஏறினாங்க, பாலக்காடு வண்டினு நினைக்கிறேன்'.  அவன் சொல்லி முடிக்கவும் தாணாக்காரர் உள்ளே வரவும் சரியாக இருந்தது. இந்த முறை அவர் மீசையும் சிரிக்கவில்லை, அவரும் சிரிக்கவில்லை.  என்ன சார் என்னாச்சு, யார் சார் என்று படபடத்தார். என் இளிச்சவாய் தனத்தை வெட்கங்கெட்டு சொன்னேன்.  அவர் ஸ்டேசனில் சொல்லி அவர்களை 'மீனாட்சிபுரம்'  'செக்போஸ்ட்' ல் வைத்து பிடிக்க ஓடினார். மாலை பத்திரிக்கையிலே வந்துவிட்டது 'மீனாட்சிபுரத்தில் சர்க்கஸ் அழகி கைது' என்று நல்ல வேளை, தாணாக்காரர் என் மானத்தை காப்பாற்றி விட்டார்.  சித்தர் பாடலை மீண்டும் திறந்தேன். "_முட்டற்ற மஞ்சளை யெண்ணெயிற்கூட்டி முகமினுக்கி_ _மெட்டிட்டுப் பொட்டிட்டுப் பித்தளையோலை விளக்கியிட்டு_ _பட்டப் பகலில் வெளிமயக் கேசெயும் பாவையர்மேல்_ _இட்டத்தை நீ தவிர்ப்பாய் இறைவா, கச்சியேகம்பனே_"