--- uuid: 60aa277c-1ba4-4762-9556-c63929b3c343 title: நைட்டி --- என்னை அவர்தான் முதலில் பெண் பார்க்க வந்தார், பெண் பார்க்க வந்தார் என்பதை விட இருவரும் சந்தித்தோம். இருவரும் பெங்களுரில் வேலை பார்த்து வந்தோம். அப்பா இவர் ஓகேவா என்று வாட்ஸாப்பில் கேட்டதற்கு நேரில் சந்திக்க வேண்டும் என்றார். அவர்கள் வீட்டில் கேட்டு இருவரும் பெங்களூரில் ஒரு ரெஸ்டாரண்டில் சந்தித்தோம். வீட்டிற்கு ஒரே பையன், நல்ல வேலை, படிப்பு, கை நிறைய சம்பளம். இயல்பாக பேசினார். நான் ஒன் சைட் துப்பட்டாவுடன் கூடிய சல்வார் அணிந்திருந்தேன். கடைசியாக போகும் போது 'உனக்கு சேலை கட்ட தெரியுமா என்று கேட்டார்'. நான் அதுவரை சேலை கட்டியதெல்லாம் அம்மா துணையுடன் மட்டுமே. ஆனால் என் தங்கைக்கு நன்றாக தெரியும், அவள் காலேஜ் லெக்சரர் வேறு, வித விதமாக கட்டுவாள். அவர் கேட்ட கேள்விக்கு தோராயமாக தலையாட்டி வைத்தேன். அவர்க்கு சேலை பிடிக்கும் போலிருக்கும் என்று எண்ணிக் கொண்டேன். ஆனால் அந்த கேள்விக்கு காரணம் நிச்சயம் முடிந்து ஜவுளி எடுக்கும் போது தெரிந்தது. அவர் அப்பா அம்மாவை நிச்சயம் அன்றுதான் பார்த்தேன். அவர் அப்பாவிடம் கொங்கு மணம் கமழ்ந்தது. மாநிறம், தூய வெள்ளை வேட்டி சட்டை, படிந்த நெற்றி நிறைய திருநீறு. நெடிய பருத்த உருவம். யாரையும் ஒதுங்க வைக்கும் கம்பீரம். அத்தையை முதலில் பார்த்த போது மாமாவுடன் அத்தையை பொருத்தி பார்க்க முடியவில்லை. அத்தை சிவந்த உருவம், கழுத்து வரைக்குமான பாப் கட், அரைவட்ட கண்ணாடி, தீர்க்கமான கண்கள், வேலை செய்து அறியாத செழுமையான உடல்வாகு . சுடிதார் அணிந்திருந்தால் அரவிந்தோ ஆசிரமத்தில் யோகா சொல்லி கொடுக்கும் பெண் போலிருப்பார். ஆனால் அவ்வளவு புதுமையிலும் அவரை தனிமை படுத்தி காண்பித்தது அவரின் சேலை. என்னருகே நின்றிருந்த என் தங்கை "சூப்பர் க்ரெபெ சில்க் சாரி", "கலர் காம்பினேசன் இஸ் ஆல்சோ நைஸ்" என்று பூரித்தாள். அந்த மொத்த கூட்டத்திலும் அவர் தனியாக தெரிந்தார். தமிழ்நாட்டு காங்கிரஸ் மீட்டிங்கிற்கு வந்த சோனியா காந்தி போல் இருந்தார். திருமணத்திற்குப் பிறகும் அத்தையின் சேலைகள் என் கவனத்தை ஈர்த்துக் கொண்டே இருந்தன. வீட்டு விழாக்களில், கல்யாணங்களில், அன்றாட வாழ்க்கையிலும் அவர் அணியும் சேலைகள் தனித்துவமாக இருந்தன. "அவங்க சேலைல ஒரு ஸ்டைல் இருக்கே," என்று என் தங்கை எப்போதும் பொறாமையுடன் சொல்வாள். எனக்கு அவர் சேலைகள் பேசுவது போல இருந்தன. அவர் இடங்களுக்கும் அந்தந்த நேரத்திற்கும் தகுந்தது போல நிறங்களையும் வடிவங்களையும் தேர்ந்தெடுப்பார். கல்யாணங்களுக்கென்று அவர் பட்டுப் புடவைகளை வாங்குவது கிடையாது. அவர் சேலை வாங்க கடைகளுக்கு சென்று பார்ப்பதில்லை. அவருக்கென்று சேலை நெய்ய ஆள் இருந்தது. அலைபேசியில் அழைத்து சொல்வதோடு சரி. அதை வடிவமைத்து காகிதத்தில் கொண்டு வந்து காண்பித்தாள் திருத்தங்கள் செய்து ஓகே சொல்வார். இதற்கென்று அவர் திருப்பூரிலும் ஈரோட்டிலும் ஆட்கள் இருந்தார்கள்.