--- uuid: 8972a99b-b6b2-416a-b6ea-d67f527d6a3a title: விஷ பரிட்சை --- ராசு அந்த காலை சுளீர் வெயிலில் நின்று கொண்டு, மல்லாந்து விரைத்துக் கிடந்த ஈயக்காலனை பார்த்துக் கொண்டுருந்தார். ரத்தம் கொதித்து மூக்கில் வரும்படி அவர் நெஞ்சம் கொதித்துக் கொண்டிருந்தது, அவர் கோபத்தை அதிகரிக்கும் வண்ணம் சாலைப் புழுதி முகத்தில் வந்து அடித்தது. "கனகு" என்று அவர் சம்சாரத்தை கத்தினார். கன்னுப் பொட்ட மாட்டுக்கு அம்புலி காய்ச்சிக் கொண்டிருந்த கனகு இரண்டாம் சத்ததிற்க்கு தான் வந்து "என்னங்க காலையிலே, அந்த வக்கபோருக்கு பின்னாடி ?" "பாம்பா ?" என்றாள். அவள் ஆற அமர வந்ததையும், அவள் ஊர் குறும்பை காட்டியதையும் ரசிக்கும் நினைப்பில் அவர் இல்லை. "இன்னைக்கு ஒரு சேவல் முடிஞ்சுது". "தூக்கி புதைங்க", "புதச்சு புதச்சு, ஒரு சுடுகாடே ஆகிப்போச்சு". "இதோட பத்தெண்ணம் போயாச்சு". "காசுக்கு ஆசைப்பட்டு அந்த பேக்கரிக்காரனுக்கு விட்டதுக்கு அருமையான வேலை" வைரமுத்துவை அழைத்துக் கொண்டு போய் மாந்தோப்புக்குள் புதைத்தார். சுற்றி அங்கங்கே சிறிய மேடுகள். ஏழு கோழியும் மூன்று சேவல்களும் புதைக்கப் பட்டிருந்தன. ​அவருக்கு நினைத்துப் பார்க்கையில் அழுகை வந்துவிடும் போல் இருந்தது. மூன்று வருடத்திற்கு முன்பு அந்த இடம் இருந்த நிலையை நினைத்துப் பார்த்தார். இளவட்டப் பயலுகளின் கொக்கரிப்பாலும், சேவல்களின் கூவல் சத்தத்தினாலும் நிறைந்து கிடக்கும். பொட்டக்காடு ராசு என்றாலே கிழக்கே புளியம்பட்டியிலிருந்து மேற்கே தாவளம் வரை தெரியாதவர்கள் யாரும் இல்லை. சேவக்கட்டு என்றாலே பொட்டக்காட்டிலிருந்து ஒரு சேவல் கட்டாயம் இருக்கும். ஊரில் ஒரு நோம்பி, காதுகுத்து கெடாவெட்டு என்றால் பொட்டக்காட்டு சேவலுக்கு அடிதடியாக இருக்கும். மூன்று தலைமுறையாக அது அப்படித்தான். ராசுவின் தாத்தனுக்கு பாகத்தில் வந்த இடம். மூத்தவனுக்கு மேட்டுக்காடு என்றும் இளையவனுக்கு இறங்காடு என்றும் பாகம் பிரித்ததில் இந்த ஒடக்கான் முட்டை வைக்காத காடும், ஒரு காரிக்கறவையும், இரண்டு மயிலைக் காளையும் பத்துக் கோழியுன் கிடைத்தது. தாத்தாவின் தம்பிக்கு தாத்தாவின் அக்கா பெண்ணை கட்டியிருந்ததால் இவருக்கு பொட்டக்காட்டைக் கொடுத்து ஏமாற்றி விட்டதாகப் பாட்டிக்கு ஆங்காரம். பாட்டி தன் நகையை விற்றும் கடன் வாங்கி ஒரு எண்ணை ஆட்டும் செக்குப் போட வைத்தாள். அதில் நல்ல வருமானம். சுற்று வட்டாரத்தில் செக்கு இல்லாத காரணத்தினாலும் புண்ணாக்கு காய வைக்க இடமிருந்த காரணத்தினாலும் நல்ல கூட்டம். அந்த வருமானத்தில் கேணியோடு இருந்த பக்கத்து ஒரு ஏக்கரை வாங்கினார் தாத்தா. சிந்திய புண்ணாக்கை தின்றே கோழிகள் ​வளர்ந்தன. தேங்காய்ப் புண்ணாக்கு வலுவான எலும்பையும் கடலைப்புண்ணாக்கு அதற்கு ஈடான கறியையும் கொடுத்தது. இதுவே பொட்டக்காட்டின் சேவலை வீரியமாக்கியது மவுசும் கூடியது. தாத்தாவுக்கு ராசுவின் அப்பாதான் ஒரே பையன். ராசுவின் அப்பா காலத்தில் மாடு காளைகளை விற்று விட்டு செக்கை இயந்திரமயமாக்கி விட்டார். அவ்வளவு சவுரியமிருந்தும் பால்க்காரர் வந்தால்தான் பால், ஏனோ அவருக்கு மாடுகள் அமையவில்லை அவருக்கும் அதில் ஆர்வம் இல்லை. ராசுவுக்கு ஒரு அக்கா. அவளை பட்டணத்தில் கட்டிக்கொடுத்திருந்தது, மச்சான் தூரத்து சொந்தம். ஆனால் சேவல்கள் மட்டும் குறையவில்லை. ராசுவின் அப்பா சேவல்களை பழக்க ஒரு தண்ணித் தொட்டி கட்டினார். பின் சும்மா மிச்சம் இருந்த பொட்டல்காடு முழுவதும் எலுமிச்சை நட்டு வைத்தார். எலுமிச்சை செடி மேலே வரும் போது ராசுவிற்கு மீசை அரும்பும் பருவம். பள்ளிக்கூடம் போவதை விட