--- id: 1684b7ac-1d9a-4f2b-b92d-33a7beecd91c title: 1.1வெம்மை tags: [] pinned: false created: 2026-03-18T15:35:42.031803123+00:00 modified: 2026-03-18T17:50:01.944253449+00:00 --- # 1.1வெம்மை # 1.1 வெம்மை இரும்போதனுக்கு விழிப்பு வந்த வேளையில் அவன் உடலின் பாதி தகித்தது. அருகில் குறும்போதனை நோக்கினான். அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். காவல் காக்கச் சொல்லினும் இவ்வன் உறங்கிவிடுகிறான் என மனத்தில் எண்ணினான். அரனாரை நோக்கினான். இருபது அடிகள் தள்ளி இருந்தபோதிலும் அவர் மேனியில் எழுந்த வெம்மை தெளிவாகத் தெரிந்தது. அவர்கள் ஒரு நதியின் நடுவே இருந்த இரு பாறைகளில் தங்கியிருந்தனர். ஒன்றில் இரும்போதனும் குறும்போதனும், மற்றொன்றில் அரனாரும் இருந்தார். அரனார் இருகாலும் மடக்கி, கண்கள் மூடி அமர்ந்திருந்தார். சுற்றிய பாறையில் வாய்க்கால் வெட்டப்பட்டிருந்தது. அதில் ஓடிய நீர் வெம்மையால் ஆவியாகிக் கொண்டிருந்தது. விந்தியமலையின் சாரலிலிருந்து தெற்கே வந்து கொல்லிமலையில் அடைந்தது பன்னிரண்டு பொழுதுகள் ஆகியிருந்தது. அதற்கு முன் இமயமலையிலிருந்து பத்து திங்கள் நீண்ட பயணம் மேற்கொண்டிருந்தனர். அரனாருடன் வந்த பத்து போதர்களில் நால்வர் அங்கிருந்தனர்; மற்ற அறுவர், பின்னால் தங்கியிருந்தவர்களை அழைத்து வரச் சென்றிருந்தனர். அங்கு வந்த அன்று மாலை இமாவனும் பெரும்போதனாரும் இவ்வாறு கட்டளை கூறினர்: “அரன் நீண்ட துயிலில் ஆழ்கிறார். இரவில் அவர் மெய் தகிக்கும்; பகலில் குளிரும். அச்சம் வேண்டாம். அரனாருக்கு இதனால் தீங்கு இல்லை. ஆனால் இதே வெம்மை நம்மையும் நம்மைச் சூழ்ந்த மரங்களையும் பிற உயிர்களையும் எவ்வாறு பாதிக்கும் என்று கூற இயலாது.” “இந்த வெம்மை பரவின் சுற்றியுள்ள உயிர்கள் வருந்தலாம்; காடுகளும் பச்சை மரங்களும் தீப்பற்றக்கூடும்.” “இவர் நீண்ட காலம் பனிமண்டலத்தில் இருந்ததால் பாதிப்பு தென்படவில்லை. இப்போது தெற்கே அனல் வீசும் கொல்லிமலையில் இருக்கிறார். இன்னும் மூன்று திங்களளவு சிறு துன்பம் இருக்கும்.” பெரும்போதனார் ஒரு பொடிப் பொட்டலத்தையும் மண் சட்டியையும் கொடுத்தார். “அரனாரின் வெம்மை மேலெழும் போது சட்டியில் நீர் எடுத்து, இந்தப் பொட்டலத்தை அதில் சில கணங்கள் ஊறவைத்து, பின்னர் அந்த நீரை சுற்றி ஓடும் வாய்க்காலில் விடுக. அப்பொழுது நீரிலிருந்து எழும் பனிப்படலம் அரனாரின் மேனியில் படர்ந்து அவரை குளிர்விக்கும்,” என்றார். ஒவ்வொரு இரவும் இரும்போதனும் குறும்போதனும் அரனாரை இவ்வாறு குளிர்விக்கும் செயலில் ஈடுபட்டனர். போதர்கள் பிற குடியினரை விட உருவத்தில் பெரியவர்கள்; மேலும் ஆழ்ந்த உறக்கமுடையவர்கள். பனி மிகுந்த நிலங்களில் வாழ்ந்ததால், அந்த உறக்கம் அவர்களின் ஆற்றலைச் சேமிக்க உதவியது. ஆனால் தெற்கே வந்தபின் காலநிலை மாறியதால் அவர்களின் உறக்கம் மாறுபட்டது. உடலை குளிர்விக்க ஆறுகளையும் நீர்நிலைகளையும் நாட வேண்டியிருந்தது. ஆற்றல் மிகுதியாக செலவானதால் அதிக உணவும் தேவைப்பட்டது. பெரும்போதனார் கூறியபடி, இரு நாழிகைக்கு ஒருமுறை பொட்டலத்தை நனைத்து நீரை ஊற்றினர். அப்பொழுது குளிர் படலம் எழுந்து பரவி வெம்மை தணிந்தது. இரு நாழிகைக்கு ஒருமுறை இரும்போதனும் குறும்போதனும் மாறிமாறி இந்த வேலையை செய்தனர். மற்றவன் அந்த இடைவெளியில் உறங்குவான். ஒரு நாழிகை முன்பே பனிப்படலம் எழச்செய்து, குறும்போதனை காவலில் நிறுத்திவிட்டு இரும்போதன் உறங்கியிருந்தான். ஆனால் இவ்வளவு விரைவில் வெம்மை மீண்டும் எழுவது அரிது. அவன் விரைந்து பானையில் நீர் எடுத்து பொட்டலத்தை ஊறவைத்து எடுத்தான். பொட்டலத்தின் எடை மிகக் குறைந்திருந்தது. அந்த நீரை வாய்க்காலில் ஊற்றியதும் பனிப்படலம் எழுந்து வெம்மை குறையத் தொடங்கியது. குறும்போதனை எழுப்பத் திரும்பியபோது, அவன் ஏற்கனவே எழுந்து அமர்ந்திருந்தான். இருளை உற்று நோக்கிக் கொண்டிருந்தான். சில கணங்கள் கழித்து அவன் விசித்திரமான சைகைகளைச் செய்யத் தொடங்கினான்.