--- uuid: 739e7ae4-3c41-47bd-9492-965a277fb35d title: 1. தேர்தல் நாள் 2047 --- ## காலை மின் எழுப்பானில் வெண்கனி விதிலனை எழுப்ப முயன்று மூன்றாம் முறை வெற்றி கண்டது. "உங்களை எழுப்புவது இந்த வாரத்தில் கடினமாக இருந்தது. நீங்கள் இருபத்து மூன்று நிமிடங்கள் அதிகமாக தூங்கியுள்ளீர்கள். உங்கள் தூக்கம் ஆழ்ந்ததாக இல்லை. மித்ராவின் இழப்பு உங்களை பாதித்துள்ளதா ?" "இது சம்பந்தமாக உங்களுக்கு கவுன்சிலிங் தேவைப் படுகிறதா ?" "இல்லை. இன்றைய வேலைகளை தொகுத்து திரையில் காண்பி" என்று அதனிடம் சொல்லி விட்டு. அவன் குளியலறை சென்றான். மித்ரா அவன் நாய், பார்வோ 2 வைரஸ் தாக்கி இறந்திருந்தது. அவன் 16 ஆம் வயதில் அவனுக்கு பரிசளிக்கப்பட்டது. விதிலன் திரும்பி வந்த போது சுவற்றில் இருந்த கணித்திரையில் இன்றைய பணிகள் தொகுக்கப் பட்டிருந்தன. அதில் அவன் மதிய நேரம் மூன்று பதினைந்து முதல் மூன்று முப்பது வரை தேர்தல் வாக்களிக்கும் நேரம் என்று ஒதுக்க பட்டிருந்தது. விதிலனின் முதல் தேர்தல். விதிலன் சை-ஃபை ஸீரியல்களில் வரும் ப்ரோடாகனிஸ்டுகள் போல நுண்ணறிவியலில் நிபுணன். குவாண்டம் என்க்ரிப்ஸன் டெக்னாலஜி போன்றவற்றில் 8 வயது முதலே ஆர்வம் கொண்டிருந்தான். உலக அளவிலான சைலண்ட் ஹாக்ஸ்களிலும், குட் வில் ஹாக்கிங் போன்றவற்றிலும் ஈடுபடவும் செய்தான். இந்த டிஜிட்டல் உலகில் இருந்து அவனை சற்று விலகி இருக்க செய்தது அவன் துணை ஆன மித்ரா எனும் நாய் மட்டுமே. 18 வயதுக்கு பின்தான் அவன் அரசியல் மற்றும் பொருளாதாரம் சம்பந்தமான செய்திகளை உற்று நோக்க ஆரம்பித்தான். நுண்ணறிவு கூறும் அரசியல் வரலாறு அவனுக்கு குழப்பத்தையே தந்திருந்தது. அவன் வெண்கனியிடம் கடந்த ஆட்சி அவன் வாழ்க்கையில் உண்டாக்கிய மாற்றங்களை தொகுக்க சொன்னான். 37 வினாடிகளில் தொகுப்பு தயாராகும் ... என்று வெண்கனி அறிவித்து விட்டு, திரையில் நட்சத்திரங்களை சுழல விட்டது. 37வது வினாடியில் தொகுப்பு பட்டியலிடப்பட்டது. - 2043 இல் இந்த ஆட்சி தொடங்கிய போது, இனி வருமான வரிக்கு பதில் சொத்து வரி வசூலிக்க படும் என்ற மாற்றத்தால் உங்களுக்கு வருடம் 20 லட்ச ரூபாய் லாபம். - 2045 இல் அறிவிக்கப்பட்ட வணிக வரி உயர்வினால் மாதம் 25, 000 முதல் 30, 000 ரூபாய் இழப்பு. இந்த வரியின் லாபம் "வீட்டுக்கு ஒரு நுண்ணறிவு" திட்டத்துக்கு செலவிடப்பட்டது. இது சம்பந்தமாக ஊழல் குற்றச்சாட்டுள்ளது. - இந்த கட்சியின் முந்தைய திட்டமான சென்னையை சிங்கப்பூர் ஆக்கும் திட்டம் இன்னும் முழுமையாக செயல் படுத்தவில்லை. முக்கிய குறிப்பு: சிங்கப்பூர் தீவு பாதி மூழ்கியுள்ளது. சென்னையின் மழைக்கால நிலைமையை ஒப்பிடுகையில் சென்னை சிங்கப்பூருக்கு இணையாக உள்ளது இந்த விஷயத்தில். - 2042ஆல் உலகம் முழுதும் பரவி பல நாய்களை பாதித்த பார்வோ 2 வைரஸ் அங்கங்கே தலை தூக்கி பாதித்தது. தடுப்பூசிகள் போட்டாலும் எல்லா நாய்களும் தப்பிப்பதில்லை. தடுப்பூசியில் ஊழல் நடந்துள்ளது என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தனர். அது இந்த தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று எதிர்பாக்கப்படுகிறது. ​ - அரசு அறிவித்த இலவச திட்டங்கள் எதிலும் உங்கள் பெயர் இடம் பெறவில்லை. நீங்கள் இன்னும் வசதி தரும் ஊதியம் பெறுவோர் பட்டியலிலேயே உள்ளீர்கள். அறிவித்த பின் இது சம்பந்தமாக தேர்தல் விளம்பரங்கள் தொடர்ந்தன ... "இ.உ.க கட்சி ஆட்சி அமைத்தால் சர்க்கரை இறக்குமதி குறைக்கப்பட்டு தடை செய்யப்படும். வீட்டுக்கு வீடு ஸ்டீவியா சர்க்கரை வழங்கல் துறை மூலமாக வழங்கப்படும். நுண்ணறிவுக்கான ஒதுக்கீடு, மாதத்திற்கு பத்தாயிரம் கிலோ அலகுகளாக உயர்த்த படும். வேலைக்கு தகுதியற்றோருக்கான பணி இழப்பீடு 30 சதவிகிதம் உயர்த்த படும். பழங்களில் இருந்து ஹைட்ரஜன் எடுக்கும் இயந்திரங்களுக்கு மானியம் கொடுக்கப்படும். இது விவசாயிகளை எரிசக்தியில் தற்சார்பு நிலையை எட்ட உதவும்." எனத்தொடர்ந்த வாசிப்பு தந்த எரிச்சல் தாங்காமல் "இன்றைய செய்திகளுக்கு செல்" என்று கட்டளையிட்டு விட்டு, அலுவல்களை கவனிக்கும் நுண்ணறிவான பிரபாவை கண்காணிக்க மற்றொரு சுவரிலிருந்த கணியின் பட்டனை தட்டினான் விதிலன். பிரபா முடிக்கப்பட்ட அலுவலக பணிகளை பட்டியிலிட்டது. பிரபா இவனால் பழக்கபடுத்தப்பட்ட நுண்ணறிவின் முலம் இயங்குகிறது. அது இவன் பள்ளி பத்தாம் ஆண்டு முதல் இவன் வாழ்கையில் பங்கு வகிக்கிறது. பிரபா முடித்த வேலைகளை அலுவலக நுண்ணறிவிடம் சரி பார்க்கும்படி கூறி விட்டு, பிரபாவை தனிப்பட்ட குறிப்புகளுக்கு மாறுமாறு கூறினான். "இன்றைய தேர்தல் பற்றி உன் கருத்து என்ன ?" பிரபாவின் கன்ட்ரோல் இவனிடம் மட்டுமே உள்ளது. வெண்கனியின் தரவுகளை அரசால் அணுக முடியும், உளவு பார்க்க முடியும். பிரபாவின் தரவுகள் குவாண்டம் 4 அல்காரிதத்தால் மறைக்கப்பட்டிருக்கிறது. 12 விநாடிகள் யோசித்த பிரபா "தேர்தல் என்பது மக்களை அவர்கள் கட்டுப்பாட்டில் அரசு இருப்பதாக நம்ப வைக்க முதலாளிகள் நடத்தும் நாடகம். அரசியல்வாதிகள் அதில் இருக்கும் நடிகர்கள். யார் தோற்றாலும் முதலாளிகள் வெல்கிறார்கள்" "இன்றைய தேர்தலும் இதற்கு விதிவிலக்கு இல்லை" பெரும்பாலான விளைநிலங்கள் அவர்களிடமே உள்ளது, இது 20 வருடங்களுக்கு முந்தைய நிலைமையின் தலைகீழ். தனிமனிதன் சுய சார்பினை அடைய அவனுக்கு நிலமும் நீரும் அவசியம், ஆனால் வேளாண் நிலச்சட்டம் இதை தடை செய்கிற்து. விவசாயப் பொருள் உற்பத்தி செய்ய குறைந்தது 50 ஏக்கர் மற்றும் 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நான்கு தேக்கங்கள் தேவையாக உள்ளது" "இது தனிமனிதனுக்கு சாத்தியம் இல்லை. இதை போல எந்த உற்பத்தி நிறுவனமும் தொடங்க 500 கோடி முதலீடோ அல்லது அதற்கு ஈடான சொத்தோ தேவை படுகிறது." "இனி புதிய முதலாளிகள் உருவாக போவதில்லை" என்று கூறி நிறுத்தியது இதற்கிடையே அலுவலக நுண்ணறிவு ஒலி எழுப்பி புதிய வேலைகளுக்கான அறிவிப்பினை தந்தது. பிரபா அவற்றை ஆராய ஆரம்பித்தது. வெண்கனி காலை உணவுக்கான மணியை ஒலிக்க செய்து. இன்றைய பட்டியல். "பழத்துண்டு கலவை, இரண்டு வேக வைத்த முட்டைகள், கம்பூச்சா தேனீர்" அறையின் கதவை யாரோ தட்டினர். திறந்த போது அப்பா நின்றிருந்தார். சாப்பிட்டாயா என்று கேட்டார். தலையாட்டினான். "தேர்தல் இன்று" என்றார். "மதிய நேரம் 3:00 மணிக்கு தந்திருக்கிறார்கள்" என்றான் விதிலன். "எனக்கு அந்த நேரம் தான், வருகிறாயா ?" என்றார். "இல்லை, இணையத்தில் போட்டு விடலாம்" என்றான். "சரி, எனக்கு நேரில் செல்ல வேண்டும்" என்று சொல்லிவிட்டு நகர்ந்தார். அப்பா சாக்கு கிடைத்தால் வெளியே சென்று விடுவார். கடந்த பத்து வருடங்களாக யுவி கதிர்கள் அதிகரித்ததால் வெளியே செல்வதால் உள்ள ஆபத்துகள் அதிகரித்துள்ளன. விதிலன் சற்றென்று அவரை நிறுத்தி "நானும் வருகிறேன்" என்றான். அவர் புன்னகைத்து விட்டு "2:30 மணிக்கு தயாராக இரு" என்று விட்டு நகர்ந்தார். ## மதியம் விதிலன் பிரபாவிற்க்கும் வெண்கனிக்கும் தகவலை தந்துவிட்டு, மணிகணிணியை மணிக்கட்டில் கட்டிக் கொண்டான். யுவி பொரடக்‌ஷன் ஜெல்லை பூசிக் கொண்டான். மதிய உணவை முடித்தவுடன் லிவிங் ரூமுக்கு சென்றான். அப்பா ஆன்லைனில் செய்திகள் பார்த்துக்கொண்டிருந்தார். அப்பா மனிதர்கள் தொகுக்கும் செய்திகளை பார்ப்பதே வழக்கம். முந்தைய தலைமுறையினர் நுண்ணறிவை உபயோகிக்கும் அளவுக்கு அதை நம்புவதில்லை. எதிலும் 'ஹுயுமன் ஃபாக்டர்' வேண்டுமன்று விரும்புகிறார்கள். ஆனால் நுண்ணறிவுதான் எல்லாச் செய்தியையும் தொகுக்கிறது. ஆனாலும் அவர்கள் நுண்ணறிவு போலி முகங்களை விரும்புவதில்லை. அப்பா ஏர் டாக்சிக்கு சொல்லியிருந்தார். 2:35 க்கு சரியாக அது வந்தது. அப்பாவின் நண்பர் ஒருவர் அதில் இருந்தார். வண்டி ஏறியுவுடன் பறந்தது. விதிலன் பெரிதாக வெளியே வருவதில்லை. அவன் கண்ட ஒரு விளம்பர கணி பலகை அவன் ஆர்வத்தை தூண்டியது. "உங்கள் உடமை எண் மூலம் நுண்ணறிவு உங்கள் ஜாதகத்தை கணித்து தரும். " எவ்வளவு தூரம் விஞ்ஞானம் வளர்ந்தாலும் மனிதனின் மூடநம்பிக்கைகளை அழிக்க முடிவதில்லை என்று எண்ணிக்கொண்டான். அப்பா நண்பரிடம் திரும்பி "ச.நீ.பே இந்த முறை வென்றுவிடும்" என்றார். நண்பர் ஆமோதித்துவிட்டு "சென்ற முறையே வென்றிருக்க வேண்டியது, வாஸ் சபோட்டேஜெட் பை நேஷனல் பார்ட்டீஸ்". அவர் ஒரு பார்சிக்காரர் என்பார் அப்பா. அவர்க்கு தெரியாத தமிழ் வார்த்தைகளை ஆங்கிலம் கொண்டு நிரப்புவார். "யெஸ், கம்பல்சரி நேஷனல் பார்டி வோடிங் இஸ் ஸ்டுபிட்" என்றார் அப்பா. விதிலனுக்கு தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை. விதிலன் அப்பாவிடம் திரும்பி "இது சட்டசபை தேர்தல் தானே, இதற்கும் நேஷனல் பார்ட்டிகளுக்கும் என்ன சம்பந்தம் ?" சற்று நிதானித்து விட்டு அப்பா "2030 இல் பாராளுமன்ற தொகுதிகளை மறுசீரமைப்பு செய்யும் போது சில மாநிலங்களுக்கு சதவீகித அடிப்படையில் தொகுதிகள் குறைந்தன. அதை ஈடு செய்ய முந்தைய சதகிவீத அடிப்படையில் தொகுதிகள் தரப்பட்டன. ஆனால் ஒரு நிபந்தனையின் கீழ் இது கொண்டு வரப்பட்டது. புதிதாக சேர்க்கப்பட்ட தொகுதிகள் தேசிய கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டன. தேசியக் கட்சிகள் மட்டுமே இவற்றில் போட்டியிட முடியும்." "அதனால் என்ன" என்றான் விதிலன். "மாநிலக் கட்சிகள் இதனால் தனிபெரும்பான்மை பெற தேசியக்கட்சிகள் கூட்டணி வைக்க வேண்டியிருந்தன" "தேசியக் கட்சிக்கு உண்டான நெறிமுறைகள் என்ன ?" என்றான் விதிலன். "குறைந்தது முன்று மாநிலங்களில் சட்டசபை பிரநிதிகள் வேண்டும்" என்றார் அப்பா. "இந்த முறை மொழி வாரி கட்சிகளுக்கு பெரும் இடியாகியது" என்று தொடர்ந்தார். "இப்போதுள்ள முக்கியமான கட்சிகள் யாவை ? அவற்றில் எவை தேசிய கட்சிகள்" என்றான் விதிலன். இப்போது ஆட்சியில் இருப்பது, 'இன்றைய உழைப்பாளர் கழகம்". இது மாநிலக் கட்சி. இவர்கள் கூட்டணி வைத்திருப்பது 'ப்ரவாஷி ஷ்ரமிக் பார்டி" (PSP). இவர்களின் சித்தாந்தம் உழைப்பவர்களுக்கே முன்னுரிமை ஆகும். இது தேசிய கட்சி. எதிர்கட்சி சமுக நீதி பேரவை, அனைவருக்கும் அனைத்தும் சமமாக கிடைக்க செய்ய வேண்டும் என்பது இவர்கள் கொள்கை. இது கடந்த தேர்தலில் வென்றிருக்க வேண்டிய கட்சி, ஆனால் தேசிய கட்சிகளால் தோற்றது. தேசிய அளவில் பெரிய கட்சியாக இருக்கும் 'பக்த விகாஸ் பார்டியும்' (BVP) PSP உடன் சேர்ந்து இ.உ.க வை வெற்றி பெற வைத்து விட்டன. ஆனால் மாநில தொகுதிகளில் ச.நீ.பே வே அதிக தொகுதிகளில் வென்றது. இந்த முறையும் கண்டிப்பாக வெல்லும் என்றார். பார்சி உடனே குறுக்கிட்டார், "எனக்கு வந்த தகவல் அப்படியில்லை" என்று குறும்பாக கண்ணடித்தார். அப்பா கொக்கி கண்களோடு அவரைப் பார்த்தார். "இந்த முறையும் 'பிளாக்' டீம் வேலையை காண்பிக்கும்" என்று சன்னமான குரலில் கூறினார். விதிலன் புரியாமல் அப்பாவை பார்த்தான். அப்பாவும் சன்னமான குரலில் "இது வதந்தியோ உண்மையோ தெரியவில்லை, நீ பிறப்பதற்க்கு முன்பிருந்தே தேர்தல் எந்திரங்கள் ரிக் செய்ய படுகின்றன என கூறப்படுகிறது, கடந்த பத்து வருடங்களாக இவை டிஸ்கனெக்டட் மோடில் வைக்கப்பட்டு, மனிதர்களால் ஒபென் செய்யப்படாமல் செர்வெரில் இணைக்கப்பட்டு வாக்குகள் எண்ணி கூட்டப்படுகின்றன. ஆனாலும் பிளாக் டீம் என்று ஒன்றிருப்பதாகவும், அது தேர்தலில் விழும் வாக்குகளை டெக்னிக்கலாக ஹாக் செய்து மாற்றுவதாகவும், அனைத்துக் கட்சியினரும் இவர்களை அணுகவதாகவும் கேள்வி" என்றார். இது விதிலனனின் ஆர்வத்தை தூண்டியது. இந்த "பிளாக் டீம்" பற்றி விதிலன் 'பக் பவுண்டி' வலை பக்கங்களில் கேள்விப் பட்டிருக்கிறான். தேர்தல் வாக்கு பெட்டியை கவனிக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருக்கும் போதே. அந்த வான ஊர்தி தரை இறங்கியது. அங்கிருந்து 100 அடி தள்ளி அரசாங்க பள்ளியின் முகப்பில் வைக்கப்படிருந்த பலகையில் வேட்பாளர் பெயர்கள் கட்சி சின்னத்துடன் மின்னிக்கொண்டிருந்தன. கூட்டம் குறைவாகவே இருந்தது. 45-50 வயதுக்கு மேற்ப்பட்டவர்களே காணப்பட்டனர். உள்ளே சென்றதும் நான்கு பூத்துகள் காணப்பட்டன. தேர்தல் செயல்முறை விளக்கத்தை விதிலன் கல்லூரியில் கண்டிருக்கிறான். அவன் அப்பாவை தொடர்ந்து சென்று அங்கிருந்த தொடு திரையில் கையினை ஐந்து விரல்களும் படும்படி வைத்தான். அது சற்று நேரம் சுற்றிவிட்டு "வணக்கம் விதிலன், உங்கள் டொக்கன் எண் 1244, பூத் 2. சற்று நேரம் காத்திருக்கவும்." என்று விட்டு ஒரு சீட்டினை துப்பியது. ஐந்து நிமிடங்கள் கழித்து இரண்டாம் பூத் இவனை அழைத்தது. இவன் திரைக்குள் சென்றவுடன் அந்த பூத் வோட்டிங் மெஷின் கண்ணுக்குப் பட்டது. விதிலன் உடனே ஓட்டளிக்கவில்லை. ## மாலை திரையை நன்றாக இழுத்துவிட்ட விதிலன். தன் மணிகணிணியை கழட்டி அந்த மெஷினிடம் வைத்து விட்டு 3டி ஸ்கேன் பட்டனை தட்டி விட்டு பின் வாக்களிக்கும் வேலையை செய்தான். அந்த 1 நிமிட நேரத்தில் அந்த மெஷினின் மொத்த அனாடமியையும் ஸ்கேன் செய்து விட்டது. ஒரு வெற்றி புன்னகையுடன் வெளியே வந்த விதிலனைப் பார்த்த அப்பா, "முதல் வாக்களிப்பு இவ்வளவு ஆனந்தமா" என்றார். மீண்டும் புன்னைகைத்தான் விதிலன். ## இரவு பிரபாவிடம் மணிக்கணியை இணைத்து, அந்த 'வோடிங் மெஷினின்' 3டி டிசைனை இணையத்தில் இருந்து எடுத்து, ஹொலோக்ரமாக பிரதிபலிக்க செய்தான். அதை ஸ்கேன் செய்த மாடலின் மீது ஓவர்லே செய்தான். சிப் பகுதியிலோ இன்புட் பகுதியிலோ மாற்றங்கள் இருக்கிறதா என்று பார்த்தான். எதிலும் மாற்றங்கள் இல்லை. அவற்றில் தகிடுதத்தங்கள் செய்வதற்கோ வழி தெரியவில்லை. கடைசி முயற்சியாக 3டி ரெண்டர் செய்து பார்க்கலாம். சில சமயங்களில் பிசிக்கல் டச் உதவி செய்கிறது. பிரபாவை 3டி பிரிண்ட் செய்ய சொன்னான். அது ப்ரேமுக்கு 2 மணிநேரமாகும் என்றும், சிப் மற்றும் மதர்போர்டுக்கு 1 மணிநேரம் ஆகும் என்றும் கூறி விட்டு பிரிண்டரை ப்ரி ஹீட் மோடுக்கு மாற்றி வேலையை தொடங்கியது. அப்போது, "உங்கள் இதயதுடிப்பு சீரற்றுள்ளது, உங்கள் உறங்கும் நேரம் தாண்டிவிட்டது" என்று கூறிய வெண்கணி. "இது இந்த மாதத்தில் மூன்றாம் முறை. நீங்கள் உறங்கவில்லை என்றால் காப்பீடு வருடாந்திர தொகை அதிகாமாகும்" என்று பயமுறுத்தியது. விதிலனும் வெளியே சென்றதால் யூவி கதிர்களின் தன்மையால் சோர்வடைந்திருந்தான். அதனால் உறங்க செல்ல எண்ணி, பிரபாவிடம் வேலையை தொடர சொல்லிவிட்டு உறங்கச் சென்றான். அந்த தேர்தல் நாளில் அவன் ஆரம்பித்த வேலை, உலகின் விதியையே மாற்ற போகிறது என்று அறியவில்லை. ​​ ​ ​ ​ ​ ​ ​