uuid: fa8b51c3-bdb8-4dd4-bdda-f6138c772f4a title: கருப்பு


கருப்பு

மே 13 4:56

தடக் தடக் .. வேட்டம்மாள் விழித்துக் கொண்டாள்.  அவள் அவன் கணவன் மறைவுக்கு பின் இந்த கிராமத்துக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகின்றன.  இந்த ரயில் சத்தம் தான் அவளுக்கு எழுப்பு மணியோசை. ஆனால் இரண்டு நாட்களாக ஒரு கருகும் வாசம் இந்த சமயத்தில், இப்பொழுது கூட யாரோ பச்சை விறகை நெய் ஊற்றி எரிப்பது போல் வாசம்.   யாரோ தலை மாட்டில் நடந்து போவது போல் இருந்ததது.  தலையை திருப்பி பார்த்தால் ஒன்றும் தெரியவில்லை. கருகும் வாசம் இப்போது கடுமையாக வந்தது.

மே 19 4:56

தடக் தடக் .. வேணி விழித்துக் கொண்டாள், பக்கத்து வீட்டில் வேட்டம்மாள் மருகும் சத்தம் கேட்டது. அவ்வளவு சத்தமாக அவள் அப்பாரு கூட மருக முடியாது. வேட்டம்மாள் பட்டணத்தில் இருந்து வந்து நான்கு மாதங்கள் ஆகின்றது. ஆனால் ஊருக்குள் ஆறு மாதம் என்கிறார்கள்.   இவள் வாழ்க்கையில் இரண்டு மாதங்கள் தொலைந்து விட்டது போல் இருந்தது.  அவள் கடைசியாக தனியாக ஆற்றுக்கு போனது ஞாபகம்  இருக்கிறது.   அந்த பழைய வேங்கை மரத்தின் அருகே ஒரு இடிந்த மண்டபம் இருக்கிறது.  அதை அவள் வேடிக்கை பார்த்துக் கொண்டு வரும் போது  ஏதோ ஒன்று அவள் மேல் குதித்தது.  அம்மாவை கேட்டால் ஒன்றும் சொல்ல மறுக்கிறாள்.

மே 14 4:56

வேட்டம்மாள் விழித்துக்கு கொண்டாள், இன்று ரயில் சத்தம் கேட்கவில்லை, ஏதோ பூனையின் அழுகுரல் போன்ற சத்தம் கேட்டது போல் இருந்ததது.  நன்றாக விழித்து பார்த்த போது மாட விளக்கின் வெளிச்சத்தில் விட்டதில் கருப்பாக மேக மூட்டம் போல் தெரிந்தது.  ஒரு வினாடியில் வேட்டம்மாளுக்கு வேர்த்து விட்டது, எழுந்து உட்கார்ந்து விட்டாள்.   இப்போது பார்த்த போது கலைந்து போவது போல் இருந்தது.  தடக் தடக் .. ரயில் பொய் கொண்டிருத்தது.

மே 18  8:56

      வேணியின் அம்மா மெத்தை வீட்டு அம்மாளோடு பேசிக்கொண்டிருந்தாள்.   “இவ கிட்ட படிச்சு படிச்சு சொலிருகேங்க, கேட்டாதானே எல்லாம் அவங்கப்பா கொடுக்கிற எடம்.  அந்த வீடே அழிஞ்சு பொய் கெடகுங்க, அது நல்ல வாழ்ந்த குடும்பம், எவனோ தொழில் போட்டில செய்வினை வெச்சு அந்த வீடு வாரிசு இல்லாம அழிஞ்சு போச்சு.  ஆம்பளைங்களே போறதுக்கு பயந்துகுர எடங்க, இவ அந்த நெல்லிக்கா திங்கறதுக்கு வேண்டி 'தனியா' அதுல போவா, இப்ப பாருங்க எத்தன சீரழிவு, பொண்ண வளத்தி கட்டி கொடுகரக்குள்ள எவளவு பாடு”.  இது வேட்டம்மாள் மகன் காதில் நன்றாக விழுந்தது, தன் தாயை நினைத்துக் கொண்டான்.

மே 15  8:56

    வேட்டம்மாளுக்கு பைத்தியம் பிடித்துவிடும் போலிருந்தது, காலையில் இருந்து யாரோ அவளை பின் தொடர்வது போல், கணக்கு பிள்ளை வேறு கேட்டார் “ஏம்மா திரும்பி திரும்பி பாக்கறீங்க, எதாவது வேனுமுங்குலா”, “ஒண்ணுமில்ல ராசு, போன் பண்ணி தம்பிய ஒரு எட்டு வந்துட்டு போக சொல்லறீங்களா, மனசே செரியில்ல”.  “செரிங்கம்மா, பக்கத்து வீட்ல ஒரே ஆர்பாட்டமா இருக்குங்க, ஏதோ மலையாள மந்திரவாதி வந்துருக்கான் போலிருக்குங்க.” என்று கிளம்பினார்.  “வீல்” என்று சத்தம் கேட்டது.  அப்போது, கருகும் வாசனை வந்தது, பட்ட பகலில் வருவது இதுதான் முதல் முறை.  அவசரமாக பூஜை அறையில் நுழைந்தாள்.  

மே 16 4 :56

   வேணியை சங்கிலியால் கட்டி போட்டிருந்தது,  வெளியில் அவள் அம்மாவின் குரல் கேட்டது “இன்னைக்குள்ள தெளிஞ்சிரும் சொல்றாங்க, ஆனா பொண்ணு உடம்பு தெம்பில்லாம இருக்குறங்காட்டி இனி பூஜையை நிறுத்திருக்குறார்,  ஆனா ரூம்பு பூரா ஒரே புகை போட்டு இருக்குறாரு, கருப்பு தப்பிக்கருதுக்கு வேண்டி கெஞ்சுமாம், யாரும் கிட்ட போக வேணாமுன்னு சொல்லிட்டு இப்பதான்  குளிக்க போனாரு”. “அய்யோ” என்று குரல் கேட்டது எல்லோரும் போழகடைக்கு ஓடினார்கள், சாமியாரின் 'கைத்தடி“ அங்கே நின்று கொண்டிருந்தான், ஆனால்  வேணியை சங்கிலியில் காணவில்லை.  இல்லை, இல்லை சங்கிலியையே காணவில்லை, சுவரோடு பெயர்த்து கொண்டு போயிருந்தது, அவர்கள் வீட்டையும் பக்கத்துக்கு வீட்டையும்  இணைக்கும் புழக்கடை கதவு திறந்திருந்தது.

மே 16 4:56

  விஷயம் கேள்விப்பட்டு, அவசரமாக ஓடி வந்தார் 'கணக்கு பிள்ளை', வேட்டம்மாள் எப்போதும் படுக்கும் கட்டிலில் உட்காந்திருந்தாள்.  தலைவிரி கோலம், குனிந்திருந்தாள், மெல்லிய ஆட்டம்.  அவளுக்கு சற்று தள்ளி வேணி விழுந்து கிடந்தாள்.   'தனியா இருக்காதீங்கன்னு சொன்னா கேட்டா தானே, பாருங்க இப்ப” என்றார்.  வேட்டம்மாளின் மகனுக்கு போன் செய்ய விரைந்தார்.

கருகும் வாசம் இப்பொது அதிகம் ஆகியிருந்தது.