title: காதலும் கம்யூனிசமும் - 1 date: 2011-04-30T00:00:00.000Z categories:
uuid: 00cafd27-e511-4566-a651-202b7cc741f9
1. விடுதலை
'கணேசா, எங்க புடிக்கற' இம்முறை குரல் கடுமையாகவே வந்தது. கணேசன் திருப்பி முறைத்தான், பின் 'லைட்'ஐ மணமக்கள் முகத்தில் விழுமாறு பிடித்தான். அரை மணி நேரத்தில் மூன்று முறை நடந்துவிட்டது. கணேசன் கதாநாயகன் கனவோடு ஊரை விட்டு ஓடி வந்த 'லட்சிய வீரர்'களில் ஒருவன்.
கணேசமூர்த்தி யாரெனில், இந்த கதையின் முதல் வரியில் வந்து விட்டமையினால் நம் கதையின் கதாநாயகன் ஆகிறார். கணேசனின் லட்சியமும் அதுவே, எப்படியாவது சினிமாவில் நாயகன் ஆகிவிடுவது என்று.
கணேசனின் தந்தை 'ரத்தினம்' நிறைந்த வியாபாரி. கரூரில் புண்ணாக்கு வியாபாரம் கொஞ்ச நாள் செய்து கொண்டிருந்தார், அதனால் அவரை 'புண்ணாக்கு' முதலி என்று அழைப்பவர்களும் உண்டு. பின் புண்ணாக்கு வியாபாரத்தில் சம்பாரித்ததை எல்லாம் வேறு எங்காவது முதலீடு செய்ய நினைத்து, கோயம்புத்தூர் அருகே 'நெடுமுத்தூரில்' தோப்பு வாங்கி போட்டார். நிலத்தை வித்த கவுண்டர் தோப்போடு சேர்த்து மூன்று காணி வரக்காடும் கொடுத்தார். ஆனால் அந்த வரக்காட்டில் 'முதலியாரின்' அதிர்ஷ்டம் காத்திருந்தது, அந்த வரக்காடு முழுவதும் வெள்ளை மார்பிள்கள் கிடைத்தன, கவுண்டரின் பொண்ணும் கிடைத்தது. 'முதலியார்' கொஞ்சம் கம்யூனிச சிந்தனை உடையவர், மெத்த படிக்காவிட்டாலும் அனுபவம் கொண்டவர். அதனால் ஊரில் தருமங்கள் சில செய்து நல்ல பெயர் வைத்திருந்தார்.
அவருக்கு பெண் கொடுத்த 'தேனப்ப கவுண்டர்' அந்நாளைய 'தி.க', அவருக்கு சாஸ்திர சம்பிரதாயங்களின் மீது நம்பிக்கை கிடையாது. நாள் நேரம் பார்க்காமல் 'மாமிசம்' சாப்பிடுபவர். அவர் மனைவி இவருக்கு எல்லாம் செய்து போட்டாலும் 'சைவம்' மிகுந்த இறை பக்தி கொண்டவர். 'பெத்தவர் பாவம் பிள்ளையை சேரும்' என்பது போல அவர்களின் ஒரே சீமந்த புத்திரியும் முதலியாரின் மனைவியுமான 'ஈஸ்வரி' பெரிய 'சாமி' பைத்தியம், 'கெடா வெட்டும்' உண்டு, குறி கேட்கும் வேலையும் உண்டு. இந்த பைத்தியத்தை தெளிய வைக்க 'முதலியார்' எவ்வளவோ முயன்றும் முடியாத காரணத்தால் விட்டு விட்டார்.
கணேசனுக்கு ஒரு அக்காள் மற்றும் ஒரு தம்பி, அக்காளை சேலத்தில் கல்யாணம் கட்டிக் கொடுத்திருந்தது, நல்ல வசதி கிரானைட் வியாபாரம். கணேசன் இளங்கலை வரை படித்திருந்தான். அக்காளுக்கு குழந்தை பிறக்கும் வரை சும்மா இருந்த சுற்றம் அடுத்ததாக இவனுடைய கல்யாணம் பற்றிய பேச்சை பலமாக ஆரம்பித்தது. அப்போதுதான் அவன் தன்னுடைய வருங்கால லட்சியமான 'சினிமா நாயகன்' குறிக்கோளை சொன்னான். அம்மா அவனுக்கு 'கருப்பு' பிடித்திருக்கிறது என்றும் 'ரெட்டை சடை சாமியாரிடம்' கூட்டிக் கொண்டு போக வேண்டும் என்று புலம்பினாள். சாதரணமாக இந்த மாதிரி லௌகிக விசயங்களில் கலந்து கொள்ளாத 'முதலியாரும்' தம் கம்யூனிச சிந்தனைகளை அவனுக்கு எடுத்துரைத்தார். சினிமா எந்த வழியிலும் நாட்டுக்கு உதவாது என்றும் அந்த எண்ணத்தை விட்டு விட்டு விவசாயம் பார்க்கும்படியும் சொன்னார்.
கணேசனின் அக்காள் கணவர் மேலே ஒருபடி போய் அவர் சின்னய்யன் மகளை பார்க்கலாம் என்று குறுக்கு சால் போட்டார். ஆனால் கணேசன் உறுதியாக இருந்த காரணத்தால் சில நிபந்தனைகளுடன் அவன் சென்னைக்கு போக சம்மதம் கிடைத்தது.
-- தொடரும்