uuid: e6a899cf-3199-4a5d-b361-2096842a438f title: garden lizard
“அப்பா” என்னும் குரலும் சுரண்டலும், என்னை எழுப்பியிருக்க வேண்டும்.
சனிக்கிழமை காலை தூக்கம் இன்னும் மீதமிருந்தது. சற்றே குழம்பிய மனநிலையில் எழுந்தேன். ரித்திகா பயம் கலந்த முகத்துடன் நின்றிருந்தாள், ரித்திகா என் ஐந்து வயது மகள்.
மூளை சுறுசுறுப்பிற்கு வந்தது. ஏன் ? என்னாச்சு ? அம்மா எங்கே ?
அவள் “அம்மா கடைக்கு ”.
“ஏன் எழுப்புனே” என்றேன். “கார்டன் லிசார்ட்” என்றாள். எனக்கு புரியவில்லை.
“காட் அண்ட் ஹிஸ் டாட்?” என்று காதில் ஒலித்தது.
இது என்ன “கடவுளும் கந்தசாமி பிள்ளையும்” போல சிவபெருமான் நேரில் வந்து விட்டாரா?
“ஒடக்காய்” என்று குரல் அவள் பின்னால் இருந்து வந்தது. என் மகன் “ரிதின்”, பத்து வயது.
“பெட்ரூம்க்குள்ளே இருக்கு, விண்டோ மேல இருக்கு ”
மெல்ல எனக்கு புரிய ஆரம்பித்தது. குழந்தைகளின் பெட்ரூம் பால்கனியின் அருகே ஒரு சாலையோர மரக்கிளை சாய்ந்திருக்கிறது. அதன் வழியே வந்திருக்க வேண்டும்.
“நடங்க பார்க்கலாம்”, என்று அந்த அறைக்கு நடந்தேன். அறை வாசலில், ரிதினிடம் திரும்பி “துடப்பத்தை எடுத்து வா”.
அவெஞ்ர்ஸ் போல “பேட்”, “துடப்பம்” சகிதம் உள்ளே நுழைந்தோம். உள்ளே நுழைந்ததும் துள்ளி குதித்தேன், “பூனை” துள்ளி குதித்து கொண்டு ஓடியது. ரிதின் சிரித்தான். அவனை முறைத்து விட்டு பார்வையை அறைக்குள்ளே செலுத்தினேன்.
அறை ஒரு குட்டி டிஸ்னி லேண்ட் போல, இளவரசி பொம்மைகளும், டக், மிக்கி மவுஸ் ஆகியோரும் கொலு வீற்றிருந்தார்கள். அந்த கொலுவில் இந்த குட்டி காட்ஸில்லாவை எங்கே தேடுவது.
மகளிடம் திரும்பி “பயந்து ஓடிருச்சு” என்றேன். அவள் நம்பிக்கையில்லாமல் என்ன முறைத்தாள். “அம்மா வரட்டும் துழாவி பார்க்கலாம்” என்றான் ரிதின்.
எனக்கு ரோஷம் வந்தது, “அம்மா எதுக்கு” நாமளே துழாவலாம் என்றேன். “ ரித்திகா முதல பொம்மையெல்லாம் எடுத்து பொட்டிக்குள் போடு.”
அவள் பயந்தாள், ரிதின் தான் “பேட்” ஐ அவள் கையில் கொடுத்து விட்டு ஒவ்வொன்றாக எடுத்துப் போட்டான். பொட்டியை நகர்த்தி கதவின் அருகில் வைத்து விட்டு, கட்டில், டேபிள் ஆகியவற்றை நகர்த்தி துழாவ ஆரம்பித்தோம்.
அரை மணி துழாவியும் ஒன்றும் கிடைக்க வில்லை.
“நிஜமா பார்த்தியா” என்று சந்தேகத்துடன் கேட்டேன், “காட் ப்ரொமிஸ்” என்றாள். திரும்பவும் “காட்” ஆ என்று எண்ணிக்கொண்டேன்.
அப்போது “என்ன பண்றீங்க” என்று என் மனைவியின் குரல் கேட்டது. திரும்பி பார்த்த போது, அவள் கதவருகே நின்று கொண்டு “இடூ எப்படி இங்க வந்துச்சு” என்று பொட்டியை பார்த்துக்கொண்டு கேட்டாள்.
“பால்கனிக்கு வலை அடிங்க சொன்னா கேக்குறீங்களா, பாருங்க பூனை செத்த பச்சோந்தியை கொண்டு வந்து போட்ருக்கு. இனி அடுத்து பாம்ப கொண்டு வரும்” என்று சொல்லிக் கொண்டே செத்த பச்சோந்தியை எனும் 'காட் அண்ட் ஹிஸ் டாட்'ஐ எடுத்து பால்கனி வழியே வெளியே எறிந்தாள்.
ரிதின், அவன் தான் பொம்மை என்று அதை பொட்டியில் போட்டிருக்க வேண்டும் என்று உணர்ந்து கையை கழுவ ஓடினான்.
நான் அந்தவார வரி விளம்பரத்தில் வலையடிக்க வந்திருந்த விளம்பரங்களை துழாவ ஓடினேன்.