uuid: 246faa91-393a-442a-aa06-e8f75c43fcab title: இனம்


இனம்

காலை எட்டு மணிக்கு அவர்கள் கிளம்பினர், விடுமுறை என்பதால் வாகன எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.

காப்பகம் போய் சேரும் வரையில் இருவரும் பேசிக்கொள்ளவில்லை.   'சிஸ்டர்' களுக்கு உண்டான புன்னைகையுடன் வரவேற்றார் காப்பாளர்.

*   *    *   *   

'கனி' 'கனி' அவன் அம்மாவின் குரல், கேட்டது.   'இங்க என்ன பண்ற?'

அவன் முதுகை காட்டிய வண்ணம் கீழே பர்ர்த்து கொண்டிருந்தான், வயது நாலுதான் ஆகியிருந்தது, பால்கனியின் கைப்பிடி அளவுக்கு வளரவில்லை.

உந்தி உந்தி பார்த்துக் கொண்டிருந்தான்,  'கீழே விழுந்திராத' என்று சொல்லி கொண்டே இவளும் எட்டிப்ப் பார்த்தாள்.

*   *    *   *   

'யு ஆர் லக்கி கப்பிள், நீங்க நேத்து நீங்க கூப்பிட்டு போனை வைத்தவுடனே, தொட்டில் மணியோசை கேட்டது,   போய் பார்த்தால் ரோஜா பூ போல் ஒரு குழந்தை, உங்களை நினைத்து கொண்டேன்'.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னைகைத்து கொண்டார்கள்.

*   *    *   *   

குப்பைத் தொட்டியில் ஒரு நாய் குட்டி போட்டிருந்தது,  மூன்று குட்டிகள் இருந்தன.   'அம்மா எனக்கு ஒரு நாய் குட்டி வேணும்', முனங்கினான்.

'ஆமாடா இருக்குற வேலை பத்தாதுனு இது வேறயா, உங்கப்பாவுக்கு 'கவர்மென்ட்' மாறர அப்பெல்லாம் 'ட்ரான்ஸ்பர்' ,  நாளைக்கு நாம மதுரை போறோமில்ல அங்க பாத்துகெல்லாம், இப்ப வந்து சாப்பிடு,  நிறைய 'பேக்கிங்' பாக்கி இருக்கு'.

'ம்ம்ம்ம்' எனக்கு இந்த நாய் குட்டி வேணும்,  அடம்பிடித்தான்.   அழுகை வெடிக்க தயாரானது.   அடிவாங்க போற கனி அம்மாவின் குரல் தடித்தது.

மேலும் இரண்டு மணி நேர அம்மா பையன் ஊடலுக்கு பின், கனி அழுது கொண்டே சாப்பிட்டு விட்டு தூங்கினான், அம்மா  'பேக்கிங்'  வேலையில் மூழ்கினாள்.

*   *    *   *   

'இப்படி வாருங்கள்', என்று அழைத்து கொண்டு முன்னே போனார் 'சிஸ்டர்'.

'பூ வனம்' என்ற காப்பகத்தின் பெயருக்கேற்ப அங்கே பூக்கள் விளையாடி கொண்டிருந்தனர், வருங்கால சோகங்கள் தெரியாமல்.

ஒரு தனியறைக்குள் நுழைந்தார் 'சிஸ்டர்', அங்கே வரிசையாக தொட்டில்களில் ரோஜாக்கள் தூங்கிக்கொண்டிருந்தன.

*   *    *   *   

மாலை 'அமுதன்' வீட்டுக்கு வந்த போது, வீடு பாதி காலியாகவும், முற்றிலும்

அமைதியாகவும் இருந்தது.  'பெட்ரூமில்'  'கவிதா' தூங்கி கொண்டிருந்தாள்.

பில்டரில் இருந்த காபியை குடித்து விட்டு 'டிவி' யை தட்டினான்.

'எப்ப வந்தீங்க? எழுப்பி இருக்கலாமில்ல' என்று கலைந்திருந்த தலையை கொண்டை போட்டுக் கொண்டு வந்தாள்.   'காலைல இருந்து ஒரே வேலை, உடம்பெல்லாம் ஒரே வலி'.

'வாண்டு எங்கே?', 'ஒரே அடம் நாய் குட்டி வேணுமின்னு, கீழே குப்ப தொட்டில இருக்கறது வேணுமுனான், மதுரைல போய் பாத்துகலாமினு அதட்டினேன், அழுதுகிட்டே போய் தூங்கிட்டான்'.

'ம்ச்,  ஆரம்பிச்சுடீங்களா. சரி நான் போய் அவன எழுப்பிட்டு வாரேன்'.  அப்பாவின் சமாதான உடன்படிக்கையின் படி, காலையில் குட்டி ஒன்றை தத்து எடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

*   *    *   *   

நேற்றைய தேதி போட்டு ஒரு குழந்தை இருந்தது, 'இன்னும் பெயர் கூட யோசிக்கவில்லை'  புன்னைகைத்தார்.

இருவருக்கும் குழந்தையை பிடித்திருந்தது, அன்றே 'பார்மாளிடீஸ்' முடிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.   'பார்மாளிடீஸ்' க்கு பெயர் தேவைப்பட்டதால்

இருவரும் ஆலோசித்து 'கனியன் வேலன்' என்று பெயரிட்டனர்.

*   *    *   *   

ஆனால் அவர்கள் காலையில் பார்த்த போது, அந்த குட்டிகள் போயிருந்தன.

கனியின் முகம் வாடியது, நேரம் செல்ல செல்ல அழுகையானது,  'அமுதனும்'  பலமுறை தேற்றி பார்த்தான், அவன் கேக்கவில்லை.

மாலை அவர்கள் கிளம்ப வேண்டியதாயிற்று, அழுது வீங்கிய முகத்துடன்

காரில் ஏறினான்.    சாமான்கள் அடங்கிய வண்டி முன் செல்ல இவர்கள் கார் பின் தொடர்ந்தது.

தெரு முக்கு திரும்பும் போது, 'அப்பா 'நாய் குட்டி'  கனி கூவினான்'.   அந்த மூன்று குட்டிகளில் ஒன்று அங்கே பொறுக்கிக் கொண்டிருந்தது. வாட்டர் கேன் நீரால் அதற்கு குளியல் நடத்தப்பட்டது.  பின் 'வேஸ்ட்'  துணியால் துடைக்கப் பட்டு கனி கையில் தரப்பட்டது.

'குட்டி' என்று வாய் நிறைய அழைத்தான்.  கார் நகர துவங்கியது,

'குட்டி'  'கனி'யின் கையில் நெளிந்து கொண்டிருந்தது.