uuid: 6df01184-4006-4470-b392-6302c03a4938 title: 1.2 உமையாள்
“உமை உமை” என்று யாரோ எழுப்பினார்கள். யாரோ அல்ல அவள் தொழி வளையாள் தான் எழுப்பினாள்.
உமை கண் விழித்து “என்னடி ?' என்றாள்.
“என்னமோ உளறினாய் ?” என்றாள் வளையாள்.
“ஏதோ கனவு” என்றாள் உமை. “விடிய விடிய கனவு காண்பவள் நீயாகத்தான் இருக்க வேண்டும்” என்றவள், “அய்யா இப்போதுதான் வெளியே சென்றார், ஆற்றுக்கு போகிறார் போலே”.
உமைக்கு உடல் சுடுவது போல் இருந்தது, பத்து நாட்களாக உடல் தானாக சுடுவதும் பின் நிற்பதுமாக உள்ளது. கையம்மையிடம் சொன்னதற்கு உடல் செழிக்கும் நாட்களில் அப்படித்தான் இருக்கும் என்றாள். உமை செழித்து முப்பத்தி ஆறு திங்கள் கடந்திருந்தது, ஆனால் ஒரு திங்கள் கூட இவ்வளவு வேதனை இல்லை.
எல்லாம் வடக்கே இருந்து அவர்கள் வந்த பின் தான். எல்லோரும் போதர்களை பார்த்துதான் வியந்தார்கள், ஆனால் இவளுக்கு சாம்பல் படிந்த வெளுத்து போன உடலோடும் சடாமுடியோடும் வந்த ஆதிரையார் தான் வினோதமாக தெரிந்தார். வளையாளுக்கு இரும்போதனாரை காண காண ஆச்சர்யம், அவர் மீது வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அவர்கள் அனைவருமே பத்து அடிக்கு மேல் உயரம் கொண்டிருந்தனர். தோலாடை அணிந்தாலும் எல்லாம் முடி உடைய தோல்கள். உடலை முழுவதுமாக மறைக்கவில்லை.
விடியா போகிறது நாமும் ஆற்றுக்குள் போகலாம என்றாள் வளையாள்.
உவவு முடிந்து மறுநாள் காட்டிற்குள் சுள்ளி பொறுக்க சென்ற போது ஒரு பெரிய யானையளவு கரும் புலி ஆதிரையாரை நோக்கி சென்று கொண்டிருந்தது. வளையாள் அதிர்ந்து சத்தமிட்டாள் ஆனால் அந்த புலி இவர்களை திரும்பி பார்த்த போது அதன் முகம் காளை முகமாக தோன்றியது. அந்த முகம் உமையாளை என்னமோ செய்தது, உமையாள் மயங்கி விட்டாள்.
கண் விழித்த போது உமையாள் வளையாள் மடியில் கிடந்தாள். ஆதிரையார் அவள் முகத்தை அவர் சாம்பல் நிற விழிகளால் பார்த்துக் கொண்டிருந்தார். “இன்னும் காலம் வரவில்லை பெண்ணெ” என்று விட்டு நகர்ந்தார். அவர் தொண்டை குழியில் இருந்த நீல நிற மணி அசைவது அழகாக இருந்தது. அவர் பின்னே கரு நிற எருது, ஒரு யானை போல சென்று கொண்டிருந்தது.
“எதற்கு காலம் வர வேண்டும்” என்று கூறிய வளையாள், “சரியான பித்தரடி ” என்று விட்டு, “நீ ஏன் மயங்கினாய்” என்றாள். “அந்த எருதை பார்க்கும்போது நான் வேறு எங்கொ சென்றுவிட்டேன், நான் மயங்கவில்லை தூங்கிவிட்டேன், பல கனவுகள் கண்டேன்” என்றாள்.
“ஒரு நாழிகை முழுதும் தூங்கியிருக்கிறாய், நான் பயந்து போனேன். உன் உடல் நீல நிறமாக மாறிவிட்டது. அவர் உன்னை வந்து பார்த்துவிட்டு, தோல்