uuid: 00fd3c9c-2de8-4e2d-86f2-87c413a3bed7 title: 1.1 வெப்பம் id: 81aa8c79-c9e6-4709-ae1b-96996c32214e tags: [] pinned: false created: 2026-03-07T09:33:23.701492394+00:00 modified: 2026-03-08T17:31:28.670761238+00:00


1.1 வெப்பம்

**1.1 வெப்பம்**

இரும்போதனுக்கு விழிப்பு வந்த போது அவன் ஒரு பாதி உடல் தகித்தது. அருகில் குறும்போதனை பார்த்தான், நன்கு உறங்கிக்கொண்டிருந்தான். அவனை காவல் செய்ய செப்பினால் உறங்குகிறான்.

அரனாரை நோக்கிய போது அவர் மேனி தகித்தது இருபதடி தள்ளியிருந்தும் தெரிந்தது.

அவர்கள் ஒரு நதியின் நடுவே இருந்த இருபாறைகளில் ஒன்றில் இரும்போதனும் குறும்போதனும், மற்றொன்றில் அரனும் இருந்தார்கள். அரனார் இருகால் மடக்கி, கண்கள் மூடி அமர்ந்திருந்தார்.

சுற்றி பாறையில் வாய்க்கால் வெட்டி இருந்தது, அதில் ஓடிக்கொண்டொருந்த நீர் ஆவியாகிக் கொண்டிருந்தது.

அவர்கள் விந்தியமலை சாரலில் இருந்து தெற்கே கொல்லி மலை வந்து பன்னிரெண்டு பொழுது ஆகியிருந்தது. அதற்கு முன் இமயமலையிலிருந்து 10 திங்கள் நெடும் பயணம். அரனாருடன் வந்த பத்து போதர்களில் நான்கு பேர் தங்கி விட மீதம் ஆறு பேர் மற்றவர்களை அழைத்து வர சென்று விட்டனர்.

அங்கு வந்த அன்று மாலை இமாவனும் பெரும்போதனாரும் இட்ட கட்டளை “அரன் நீள் துயில் கொள்கிறார் அவர் மெய் இரவில் தகிக்கும் பகலில் குளிரவும் கூடும். அச்சம் வேண்டாம், அரனுக்கு இதனால் ஆபத்து இல்லை. ஆனால் அதையே நாம் நமக்கும் நம்மை சுற்றி இருக்கும் மரங்களும் மற்ற உயிர்களும் என்னாகும் என்று சொல்ல இயலாது.“

“இந்த வெப்பம் பரவினால் சுற்றி இருக்கும் உயிர்கள் பாதிக்க கூடும், காடுகள் பச்சை மரங்கள் தீ பற்றக் கூடும்”

“இவர் இவ்வளவு காலம் பனி மண்டலத்தில் இருந்ததால் பாதிப்பு தெரியவில்லை, இப்போது தெற்கே அனல் வீசும் கொல்லி மலையில் இருக்கிறார், இன்னும் மூன்று திங்களுக்கு சற்றே சிரமம் இருக்கும்”

பெரும்போதனார் ஒரு பொடிப் பொட்டலத்தையும் மண் சட்டியையும் தந்தார். அரனின் வெப்பம் அதிகரிக்கும் போது, சட்டியில் நீர் எடுத்து பொட்டலத்தை அதில் சில வினாடிகள் ஊற விட்டு பின் அந்த நீரை சுற்றி ஓடும் வாய்க்காலில் விட வேண்டும். அப்போது நீரில் இருந்து எழும் படலம் அவர் மீது படரும் போது அவர் உடல் குளிரும் என்றார்.

ஒவ்வோர் இரவும் இரும்போதனும் குறும்போதனும் அரனை குளிர்விக்கும் வேலை செய்து வந்தனர். போதர்கள் அதிகம் உறங்குபவர்கள், மற்ற குடியினரை விட உருவத்தில் பெரியவர்கள். அவர்கள் பனி மிகுந்த பகுதியில் இருந்ததினால் உறக்கம் அவர்களின் அதிக ஆற்றலை சேமிக்க உதவியது.

தெற்கே வந்த போது காலநிலை மாற்றத்தால் உறக்கம் பெரியளவில் மாறுபட்டிருந்தது. உடலை குளிர்விக்க ஆறுகளையும் நீர்நிலைகளையும் நாட வேண்டியிருந்தது. அதிக ஆற்றல் செலவால் அதிக உணவு தேவைப்பட்டிருந்தது.

பெரும்போதனார் கூறியது போல இரு நாழிகைக்கு ஒரு முறை பொட்டலத்தை நனைத்து தண்ணீரை ஊற்றினர், அங்கே குளிர் படலம் உண்டாகி படர்ந்தது, வெப்பமும் தணிந்தது. இரு நாழிகைக்கு ஒரு முறை இரும்போதனும், குறும்போதனும் மாறி மாறி இதை செய்தனர். மற்றவர் இதற்கிடையே உறங்குவது என்று ஏற்பாடனது.

ஒரு நாழிகை நேரம் முன்பு தான் பனிபடலம் உண்டாக்கிவிட்டு குறும்பொதனை காவல் செய்யவிட்டு பெரும்போதன் உறங்கி இருந்தான். ஆனால் இவ்வளவு விரைவில் வெப்பம் அதிகரித்திருக்க வாய்ப்பில்லை. விறுவிறுவென்று பானையில் நீரை விட்டு பொட்டலத்தை ஊற வைத்து எடுத்தான், பொட்டலத்தின் எடை வெகுவாக குறைந்திருந்தது. நீரை கால்வாயில் ஊற்றிய போது பனி படர்ந்து வெப்பம் குறைய தொடங்கிய்து.

குறும்போதனை எழுப்ப திரும்பிய போது அவன் எழுந்து அமர்ந்திருந்தான். எதையோ அந்த இருட்டில் உற்று பார்த்துக் கொண்டிருந்தான். சில நிமிடங்களில் விந்தையான சைகைகளை செய்ய தொடங்கினான்.