uuid: 6df01184-4006-4470-b392-6302c03a4938 title: 1.2 உமையாள் id: 134ac60f-59fe-4f15-b0af-64569505eaa8 tags: [] pinned: false created: 2026-03-07T01:06:32.382051094+00:00 modified: 2026-03-18T15:47:18.811051764+00:00
கரு உவவு இரவில், மின்மினி நிறைந்த காட்டின் நடுவில் அந்தப் பதின்ம வயது சிறுமி நின்றிருந்தாள். இரவில் பூக்கும் மலர்களைப் போல ஒவ்வொரு கிளையிலும் கொத்துகொத்தாக மின்மினிகள் மின்னின.
அப்பொழுது ஒரு செம்பொன் நிற மின்மினி வானிலிருந்து விழுவது போல் பறந்தது. அது தானே பறந்ததோ, காற்றின் இழுப்பில் சென்றதோ என உணர இயலவில்லை.
அதைப் பிடிக்க வேண்டும் என்ற ஆசை அவளுள் எழுந்தது. எண்ணத்திற்கும் முன்னே நடக்கும் குழந்தைபோல் தாவி அதைப் பிடிக்க முனைந்தாள். அவள் கையை நீட்டும் போதெல்லாம் அது விலகிச் சென்றது; காற்று இழுக்கும் திசைதோறும் பறந்தது.
இறுதியில் அது ஒரு மரத்தடியில் விழுந்தது. குதூகலித்து அதை எடுத்துக்கொள்ள அவள் முனைந்த வேளையே திடுக்கிட்டாள்.
அது மின்மினி அல்ல — தீப்பொறி.
அந்த மரத்தின் உலர்ந்த இலைகளில் தீ பற்றிக் கொண்டது. கணநேரத்தில் மரமெங்கும் பரவியது. அதுவே வனமெங்கும் விரைந்து பரவத் தொடங்கியது.
“தீ! தீ!” என அவள் அலறத் தொடங்கிய வேளையில்—
“உமை! உமை!” என்று அவள் தொழி வளையாள் அவளை எழுப்பினாள்.
உமை கண் விழித்து, “என்னடி?” என்றாள்.
“எதோ உளறினாய்,” என்றாள் வளையாள்.
“ஏதோ கனவு,” என்றாள் உமை.
“விடியவிடியும் கனவு காண்பவள் நீயல்லவா?” என வளையாள் சிரித்தாள்.
“அய்யா இப்போதுதான் வெளியே சென்றார்; ஆற்றை நோக்கிச் சென்றார் போலும்.”
உமைக்கு உடல் சுடுவது போல் இருந்தது. பத்து பொழுதுகளாக அவள் மேனி தானாக வெம்மை கொண்டு, பின்னர் தணியும் நிலை ஏற்பட்டிருந்தது. கையம்மையிடம் கூறியபோது, “உடல் செழிக்கும் காலங்களில் இவ்வாறே நிகழும்,” என அவள் சொன்னாள்.
ஆனால் உமைக்கு அது இயல்பாகத் தோன்றவில்லை. முப்பத்தாறு திங்கள் கடந்திருந்தாலும், ஒருநாளும் இவ்வாறான வேதனை இல்லை.
அவர்கள் வடக்கிலிருந்து வந்த பொழுதிலிருந்து இவ்வாறான மாற்றம் தோன்றியது.
அனைவரும் போதர்களைக் கண்டு வியந்தனர்; அவர்களுடன் வந்த அரனாரைக் கண்டு அச்சமடைந்தனர்.
சாம்பல் பூசப்பட்ட வெளிறிய மேனி, சடாமுடி, சாம்பல் நிறக் கண்கள், நெற்றியின் நடுவில் கண் போலத் தோன்றும் ஆழ்ந்த வெட்டு — இவையெல்லாம் அரனாரை அச்சமூட்டும் தோற்றமுடையவராகக் காட்டின.
அவர்கள் யாவரும் பத்து அடிக்கு மேலான உயரமுடையோர். தோலாடை அணிந்திருந்தும், அது முழு மேனியையும் மறைக்கவில்லை.
வேட்டைக்குச் சென்றவர்கள், அவர்கள் கொல்லிமலையின் அடிவாரத்தை அடைந்த வேளையிலேயே செய்தி கொண்டு வந்தனர். முன்பும் பின்னும் அணிவகுத்து வந்ததாகவும், அவர்களுடன் ஒரு பெரிய விலங்கு இருந்ததாகவும் கூறினர்.
அது வேழமோ, எருதோ, யாளியோ என யாரும் உறுதியாகச் சொல்ல இயலவில்லை.
குடிசாளைகளை அடையும் முன் அந்த விலங்கு மறைந்துவிட்டதாகவும், அதனால் அது யாளி ஆகலாம் என சிலர் நம்பினர்.
அரனாரின் அடர்ந்த சடையில் கருநாகம் இருப்பதாக ஒருவன் கூறினான். ஆனால் அதனை யாரும் நம்பவில்லை; சடையின் தோற்றமே அவ்வாறு தோன்றியிருக்கலாம் என நினைத்தனர்.
கொல்லியர்களில் ஆண்கள் எழடிக்கு மிகாதோர்; பெண்கள் அவர்களுக்கு இணையாய் இருந்தனர். வேட்டைதான் அவர்களின் பெரும் தொழில். சிலர் தோல்களை பதனிட்டு கடம்பவனப் பயணிகளுக்கு வழங்கி பண்டங்களையும் ஆயுதங்களையும் பெற்றனர்.
சில குடியினர் வைத்தியத்திற்காக அடிவாரத்திற்குச் செல்வர்; மேலே வருதல் அயலாருக்கு எளிதல்ல.
அய்யன், வெளியினரை குடிசாளை எல்லைக்குள் அனுமதிப்பதில்லை. பலமுறை அமரரும் அவுணரும் மலையின் கீழ் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கிடையே நிகழும் போரினால், நஞ்சும் மூலிகைகளும் பெரிதும் தேவைப்படும். அவற்றைப் பெற அவர்கள் வருவர். ஆனால் கொல்லிமலையிலிருந்து எதையும் எடுத்துச் செல்ல அய்யனின் அனுமதி அவசியம்.
சில காலமாக மூலிகை வனங்களில் அறியாத நடமாட்டம் காணப்பட்டது. அவுணர்கள் சிலர் மறைந்து வருவதாக அறிந்தும், அவர்களைப் பிடிக்க இயலவில்லை.
வளையாளின் அண்ணன் மறநிலவன் இம்மூலிகைகளை காக்கும் பொறுப்பில் இருந்தான். அவனுக்கு போதர்களை அனுமதித்தது மனத்துக்கு இனியதாக இல்லை. அவர்கள் சென்றிடமெல்லாம் அவன் பின்தொடர்ந்து கவனித்தான்.
ஒருநாள், பொழுது விடிந்து இரு நாழிகை கடந்தபின், வயிற்றைப் பற்றிக் கொண்டு அய்யன் சாளை முன் வந்து நின்றான் மறநிலவன்.
“அய்யா!” என பெருங்குரலிட்டு கீழே விழுந்தான்.
அவன் குடல் கிழிந்து வெளியே விழுந்தது. குருதி தரைமுழுதும் பரவியது.
அந்த சத்தம் கேட்டு வெளியே வந்த உமையாள், காட்சி கண்டவுடனே மயங்கி விழுந்தாள்.