id: 5b7a6a2b-757c-4510-80a2-0b24c8ba9912 title: 1.4 ஏழகி tags: [] pinned: false created: 2026-03-18T15:48:39.987046629+00:00 modified: 2026-03-18T17:59:19.226873393+00:00


1.4 ஏழகி

குருதி பொங்கித் தரையில் விழுந்தவனைத் தூக்கி மடியில் ஏந்திக் கொண்டு வளையாள் கதறினாள். இமவான் அவளை அமைதிப்படுத்தி, மரப்பலகையில் அவனைப் படுக்கச் செய்தார். அவன் குடலை உள்ளே தள்ளி, வயிற்றை வாழைமட்டையால் இறுக்கமாக கட்டினர். ஆனாலும் குருதி அடங்கவில்லை.

சுற்றியிருந்தோர், “அந்த எருது பாய்ந்த காயமோ?” என்று ஒருவரொருவர் சொல்லிக்கொண்டனர். ஆனால் அந்த நிலையிலும் நிலவன் தலையசைத்து “அன்று…” என முனகினான்.

இமவான் திகைத்து நின்றார். குருதி நின்றால்தான் மருந்திட முடியும்; காயத்தின் அகலத்தைக் கண்டபோது அது எளிதல்ல என்பது தெளிவாயிற்று.

அந்தவேளையில் அங்கு சலசலப்பு எழுந்தது.

அரனாரும் போதர்களும் அங்கே தோன்றினர்.

கூட்டத்தினரிடையே வெறுப்பு, அச்சம், ஐயம் கலந்து ஒரு கனமான அமைதி நிலவியது.

ஒரு கணத்தில் நிலைமையைக் கணித்த அரனார், போதரிடம் நீர் கொண்டு வரச் சொன்னார். இமவானிடம் “வல்லாற்றை” மூலிகை கொண்டு வருமாறு கூறினார்.

நிலவன் மயக்கத்தின் விளிம்பில் சென்றான்.

அரனார் வல்லாற்றை கசக்கி ஒரு கரத்தில் எடுத்துக் கொண்டார். பின்னர் தம் மேனியில் படிந்திருந்த நீற்றைத் துடைத்து மற்றொரு கரத்தில் எடுத்துக்கொண்டார்.

அரனார் கட்டுகளை அவிழ்க்கச் செய்தார். உடனே குருதி வாய்க்கால் உடைந்த நீர் போல் பொங்கிப் பரவியது.

வல்லாற்றையும் நீற்றையும் ஓன்றாய் கலந்து காயத்தின் மீது தேய்க்க தோல் பொசுங்கி புகை எழுந்தது.

நிலவன் ஆ வென்று அலறினான், வளையாள் அவன் வேதனை கண்டு கலங்கினாள்.

ஆனால் குருதி நின்றது.

பின்னர் மேலும் வல்லாற்றை எடுத்து நீரில் நனைத்து பிழிந்து காயத்தின் மேல் ஊற்றினார். அது குருதியையும் நீற்றையும் கழுவி, காயத்தை தெளிவாக வெளிப்படுத்தியது.

அந்தக் காட்சியைக் கண்டு சுற்றியிருந்தோர் ஒருமித்துச் சுவாசமடைந்தனர்—

“ஆ… அய்யோ!”

நிலவனின் வயிறு குறுக்காக நீண்ட கோடுபோல் வெட்டப்பட்டிருந்தது. வெளியில் அது மெல்லிய கோடுபோலத் தோன்றினாலும், உள்ளார்ந்த ஆழம் பெரிதென்பது கிழிந்த தசைகளிலிருந்தே தெளிவாயிற்று.

மலையில் வாளாயுதம் எவரிடமும் இல்லாததால், யாவரும் குழம்பி இமவானை நோக்கினர்.

நிலவன் மெதுவாகத் தெளிவடைந்தான்.

அவனுக்கு நுங்கும் ஆட்டுப்பாலும் கொடுக்கச் செய்தார் இமவான்.

அரனார் நீர் தெளித்து உமையாளையும் விழித்தெழச் செய்தார்.

கூட்டத்தினரைச் சற்றே விலக்கி அமைதிப்படுத்திய இமவான், நிலவன் தெளிந்ததும், “இதைச் செய்தது யார்?” எனக் கேட்டார்.

நிலவன் மெதுவாக உரைக்கத் தொடங்கினான்—

அரனாரைத் தொடர்ந்து அவன் மரங்களின் அடர்ந்த புறங்களுள் சென்றான். பலாமரத்தின் அடியில் அரனார் நீண்ட நேரம் அமர்ந்திருந்தார்.

அவ்வேளையில் நிலவன் அருகிலுள்ள மரத்தின் மீது ஏறி இருந்து அவரை கவனித்தான்.

அங்கிருந்து நோக்கியபோது பலாமரங்களுக்கிடையே தனியே மேயும் ஒரு ஆடு அவன் கண்களில் பட்டது. ஆனால் அதன் உருவம் இயல்பினும் விலகி இருப்பதெனத் தோன்றியது.

அவன் கவனம் அரனாரிலிருந்து விலகி அந்த ஏழகத்தின் மீது சென்றது.

அது நகர்ந்த விதமும் மேயும் போக்கும் இயல்பாக இல்லை.

மெல்ல பதுங்கி அதன் அருகே சென்றான் நிலவன்.

ஒரு கணத்தில் பாய்ந்து அதன் பின்காலைக் பற்றினான்.

அந்தத் தொடுதலிலேயே அது ஆடு அன்று—

ஒரு பெண்ணின் கால் என்றுணர்ந்து அவன் அதிர்ந்தான்.

ஆனால் உணர்வதற்குள்—

அவனை நோக்கித் திரும்பிய அந்தப் பெண், அவனை விட உயரமானவள். ஒரு சுழலில் அவள் அவனை குறுக்காக வெட்டினாள்.

நிலவன் பின்னே சாய்ந்தான்.

அந்தப் பெண்—ஆடு போலவே—ஒரு தாவலில் மறைந்தாள்.

இதனை எல்லாம் கவனித்து வந்த அரனார் மெதுவாக,

“ஏழகி…” என உரைத்தார்.

பின்னர் இமவானை நோக்கி,

“காலம் கனிந்துவிட்டது,” என்றார்.