uuid: 8910f8bd-5f0e-4113-ba76-25b8cf2ebdfd title: பேட்டா
பேட்டா
தேவம்மாளுக்கு விழிப்பு வந்தது. நடு முதுகு சில்லென்றிருந்தது. யாரோ தொட்டது போல இருந்தது. திரும்பிப் பார்த்தாள் படத்தின் முன்னால் இருந்த வர்த்தி கெட்டிருந்தது.
தேவா மூன்று மாதமாக ஒண்டிக்கட்டை. குழந்தைகள் இல்லை, புருஷன் ஈரல் அழுகி இறந்துவிட்டார், இவளுக்கு பனியன் கம்பெனியில் வேலை.
அவர் போய், முதல் இரண்டு மாதம் ஒன்றும் தெரியவில்லை. ஒரு மாதமாக இப்படித்தான் விழிப்பு வருகிறது. மறுநாள் ராணி அக்காவிடம் சொன்னாள். அவள் “யெசப்பா” என்று சொல்லிவிட்டு குறியிட்டு கொண்டாள்.
ராணியும் தேவாவும் ஒரே இல்லத்தில் வளர்ந்தவர்கள், ஆனால் அவள் புருஷன் நல்ல பாட்டாளி. இரண்டு குழந்தைகள்.
“புதன்கிழமை கம்பெனிக்கு டாக்டர் வரும்போது போய் காமி. எதுக்கும் மசூதில சொல்லி கயிறு கட்டிகுறியா” என்று கேட்டாள். ஏனோ மனம் ஒப்பவில்லை.
டாக்டர் பிரஷர் பார்த்தார். “லிட்டில் ஹை, லேசா பிரஷர் இருக்குமா. உப்பு கம்மியா சேர்த்திக்குங்க, மருந்து தாரேன். தலைவலி இருக்கா?”. இல்லை என்றாள்.
அவள் தலைவலி போய், மூன்று மாதம் ஆகிறது. கம்பெனிக்கு எதிரிலேயே “ கவுர்ன்மெண்ட் கடை” இருக்கிறது. அவர் கேட்டிலேயே உட்கார்ந்திருப்பார். தினமும் “சரக்கு பேட்டா” கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் கம்பெனி வாசலிலேயே ரகளை.
ஒரு வாரம் மாத்திரை சாப்பிட்டு பார்த்தாள், அப்பிடியே தான் இருந்தது. வெள்ளிகிழமை இஸ்மாயில் பாயிடம் சொல்லி கயிறு வாங்கி கட்டி கொண்டாள். அப்போதும் தூக்கம் கொள்ளவில்லை.
அடுத்த வாரம் மீண்டும் டாக்டரிடம். “உங்களுக்கு ஆபரேஷன் ஏதாவது பண்ணியிருக்கா ?, எதுக்கும் ஸ்கேன் எழுதி தாரேன். நெக்ஸ்ட் டைம் பண்ணிட்டு வாங்க”
அன்று கம்பெனியில் இருந்து வெளியே வரும் போது “கடையில்” சிலர் கருப்பு வேட்டி கட்டிக் கொண்டு நின்றனர். முக்கு மாடன் கோயில் தேராக இருக்க வேண்டும். படையலுக்கு சரக்கு வாங்க வந்திருப்பார்கள். சாமிக்கும் சரக்கு செத்தாலும் சரக்கு என்று நினைத்தாள்.
சுருக்கென்றது, விடு விடுவென்று போய் ஒரு பாட்டிலை வாங்கினாள்.
அன்று பாட்டிலை திறந்து படத்தின் முன் வைத்துவிட்டுப் படுத்து கொண்டாள். நெடியில் வீடு நிரம்பியது. அன்று நன்றாகத் தூங்கினாள்.
