id: 3bf72442-3867-49b0-8bd3-06fa7d01d3a3 title: 1.3 இடபர் tags: [] pinned: false created: 2026-03-10T13:40:54.421970512+00:00 modified: 2026-03-18T18:26:10.041926424+00:00
1.3 இடபர்
குறும்போதன் நோக்கிய திசையிலிருந்து இரு கண்கள் மின்னின. விண்மீன் ஒளியில் சாம்பல் நிறக் கொம்புகளும் கருத்த திமிலும் தென்பட்டன.
“இடபர்…” என்று இரும்போதன் வாய் அவனறியாது உரைத்தது.
“ஆம்,” என்றான் குறும்போதன் மெதுவாக.
“அரனாரைக் காண்.”
அவரைச் சூழ்ந்திருந்த பனிப்படலம் அகன்று, அரை நாழிகைக்குள் வெம்மை மேலெழுந்தது. என்ன செய்ய வேண்டும் என அறியாது இரும்போதன் திகைத்து நின்றான்.
“குழம்பாதே,” என்றான் குறும்போதன்.
“நாம் காலத்தை வீணாக்கினோம். இப்போது செய்ய வேண்டியது ஒன்றே.”
அவ்வாறு சொல்லிவிட்டு பானையை எடுத்தான்.
ஆற்றின் நீர் அவர்களின் முட்டிவரை ஓடிக் கொண்டிருந்தது. கரையிலிருந்து மண் வெட்டி பானையில் கொண்டு வரச் சொன்னான். இரும்போதன் விரைந்து சென்று மண் கொண்டு வந்தான்.
அந்த மண்ணை குறும்போதன் நன்கு குழைத்து வாய்க்காலின் உள்புறம் சுவர்போல் கட்டினான். அது ஈயல் அமைக்கும் புற்று போலத் தோன்றியது.
அரனாரின் தோள்வரை அந்த அமைப்பு சென்றதும் உள்ளே பொட்டலத்தை வைத்தான். சிறிது சிறிதாக கசியும் நீர் பொட்டலத்தில் பட்டு குளிர்ந்து பனிப்படலமாய் எழுந்தது.
அதை கழுத்துவரை நிரப்பி, குச்சிகளைப் படுக்கைவாட்டில் அமைத்து மூடினான்.
அவன் வேலை முடிவுற்ற வேளையே கிழக்கு வெளிறத் தொடங்கியது.
அரனாரின் உடல் குளிரத் தொடங்கியிருந்தது. அதுவரை ஈரமாய் இருந்த புற்றைச் சுற்றி பனி வெளிறெனப் பரவியது.
அந்தக் காட்சி இரும்போதனுக்கு வடமேருவையும் அதன் பனித் தொடரையும் நினைவூட்டியது. மனம் நெகிழ்ந்தது.
மற்ற உறவுகள் எந்நேரத்தில் வருவர் என்ற எண்ணமும் எழுந்தது. அவன் திரும்பிக் குறும்போதனை நோக்கினான்.
குறும்போதன் அந்தச் சிறிய மேருவைச் சுற்றி மெதுவாக நடந்து கொண்டிருந்தான்.
அவன் மிகுந்த அறிவுடையவன். இரும்போதனை விட மூன்று பருவங்கள் இளையவன். ஆயினும் பலவகைப் பொறிகளை செய்து பார்த்தவன். காற்றின் போக்கும் மழையின் நேரமும் திங்கள், பரிதி சுழற்சிகளும் அவனறிந்தவை.
அரனாரின் மனமும் இடபரின் இயல்பும் அவனுக்குத் தெரிந்தவை.
இடபரை நினைத்தவுடன் கடந்த பன்னிரண்டு திங்களில் நிகழ்ந்த மாற்றங்கள் இரும்போதனின் மனதில் எழுந்தன.
அரனார் கொண்ட சினமும், அதனால் பற்றிய நெருப்பும், அதன் விளைவாக தெற்கே வந்த பயணமும் — பெருகி ஓடும் நதியொன்றின் ஓட்டம்போல் நினைவில் எழுந்தது.
