notes:personal:stories:காட்டேரி_மரம்

uuid: 9775d2c2-d569-4c13-ae87-a6002cade3e4 title: காட்டேரி மரம்


காட்டேரி மரம்

“ஹோட்டல் ட்ரன்ஸல்வேனியா” பார்த்துக் கொண்டிருந்த என் பெண் திரும்பி என்னைப் பார்த்துக் கேட்டாள்.

“ட்ராக்குலா எல்லாம் ரியலா டாடி”

அதற்கு நான் வாய் திறப்பதற்கு முன் என் பெரியவன்

“அதெல்லாம் ரியல் இல்ல, சிமிலர் டூ கோஸ்ட். ஜஸ்ட் சீ இட் அஸ் எண்டெர்டயின்மெண்ட்”

நாலு வார்த்தை பேசினால் ஒரு வார்த்தை தமிழ் என்று நொந்து கொண்டேன். நல்ல வேளை என்னை ஆங்கிலம் பேச சொல்வதில்லை என்று தேற்றிக்கொண்டேன். என்னை இன்னமும் பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு பதில் சொல்ல கடமை பட்டு.

“பழந்தின்னி வவ்வால் இருப்பது போல ரத்தம் குடிக்கிற வவ்வால் இருக்கு, அத பாத்து பயந்து போய் ரத்தக் காட்டேரினு பெயர் வெச்சிடாங்க நம்ம ஊர்ல. ஆனா வெளிநாட்ல எல்லாம் ராஜாவே காட்டேரியா இருந்திருக்கறங்க, எப்படினு தெரில”

அவளுக்கு பதில் சப்பேன்று இருந்திருக்க வேண்டும். “ஓகே” என்று சொல்லி விட்டு தலையை திருப்பிக் கொண்டாள்.

எனக்கு அம்மா பாட்டி ஊரில் இருந்த காட்டேரி மரம் ஞாபகம் வந்தது.

வருடத்திற்கு ஒரு தடவை அம்மா பாட்டி வீட்டிற்கு விடுமுறைக்கு போவோம். அங்கே பாண்டி என்னும் ஒரு ஆடு மேய்க்கும் பையன் இருந்தான். அவந்தான் எனக்கு சோடி. காலை பதினோரு மணிக்கு அவன் ஆடுகளை முடுக்கி கொண்டு சிங்கப்பூர் நாயக்கர் காட்டுக்கு செல்வான். கூட ஒரு ரப்பர் பந்தை தூக்கிக் கொண்டு செல்வேன்.

சிறிது நேரம் விளையாடுவோம். அது பதினைந்து ஏக்கர் பரப்பளவினால் ஆன காடு. நாயக்கரின் மகன் வெளியூரில் இருந்த்தார், காடு மாமாவின் பொறுப்பில் இருந்தது. பல பழ மரங்கள் வளர்ந்து காடு போல இருக்கும். தீனிக்கு பஞ்சமில்லை, பாட்டியும் ஒரு கூடையில் தண்ணி போசியும் தீனிப்பண்டமும் கொடுத்துவிடுவாள்.

காட்டின் ஒரு மூலையில் சிங்கப்பூர் பழ மரங்கள் இருந்தன. ஒரு இருபது மரங்கள் இருக்க வேண்டும், ஆனால் எல்லாம் மூன்றடி சுற்றளவு உள்ள மரங்கள். அவற்றின் நடுவே நாயகமாக இருந்தது காட்டேரி மரம். வெளியே இருந்து பார்த்தால் அதன் தலையும் அதில் தொங்கிக் கொண்டிருக்கும் கணக்கற்ற வவ்வால்களும் ஒரு ராட்சதன் தலை போல் தெரியும். சிங்கப்பூர் மரங்கள் நாயக்கரின் தாத்தா காலத்தில் வைத்தது. தோப்பு முழுவதும் குருவிகள், குயில்கள் என்று ரம்மியமாக இருந்தாலும் இந்த காட்டெரி மரம் இருக்கும் பகுதி மட்டும் அமைதியா இருக்கும்.

அந்த காட்டேரி மரம் எப்படி வந்தது என்று யாருக்கும் தெரியாது. மரமே சிவப்பாக இருக்கும் என்றும், அதன் வவ்வால்கள் ரத்தம் குடிப்பவை என்றும் அவை தலைகீழாக தொங்கும் போது அதன் வாயில் இருந்து ஒழுகும் ரத்தத்தினால் அப்படியாகிவிட்டது என்றும் பேச்சு. அந்த மரம் ரத்தம் குடித்து வளர்ந்ததால் அதை வெட்டினால் ரத்தம் வரும் என்றும் பேச்சு.

பாட்டி அங்கே போக கூடாது என்று கண்டிப்பாக கூறியிருந்தாள். பலர் அங்கே ரத்தம் கக்கி செத்ததாகவும் கூறுவாள்.

அதுவும் சிங்கப்பூர் பழங்களுக்கு என்றே வரும் வவ்வால்கள் செத்துகிடப்பதை பார்க்கும் போது, காமிக்ஸில் படித்த வவ்வால் மனிதன் கதையெல்லாம் ஞாபகம் வந்தது.

பாண்டியிடம் கேட்டால் அது கருப்பராயன் மரம் என்றும் அங்கே முதலில் கருப்பராயன் கல் இருந்ததாகவும் அதை நாயக்கர்கள் புதைத்து விட்டதாகவும் அது மரமாக வளர்ந்து விட்டதாகவும் சொல்லுவான். இது அவனுக்கு அவன் பாட்டி சொன்ன கதை.

ஆறாவது பரிட்சை விடுமுறையில் போன போது நாயக்கர் பாட்டி வீட்டுக்கு வந்திருந்தார். வடநாட்டில் இருந்து குதிரை குட்டிகள் வருவதாகவும், மாடுகளுடன் கூட சேர்த்து வளர்க்குமாறும், வளர்ப்புக் கூலி கொடுத்து விடுவதாகவும் கூறிச் சென்றார். பாட்டி இது வேண்டாத வேலை என்று முனகினாள்.

ஒரு வாரத்தில் நான்கு குதிரைக்குட்டிகள் வந்து சேர்ந்தன. வந்து இரண்டு நாள் ஊர்கூட்டமே பாட்டி வீட்டுக்கு வந்து வந்து போய் கொண்டிருந்தது. பத்து நாள் ஆன போது குதிரைகள் பழகி விட்டன. ஆனால் நடை இல்லாமல் குதிரைகளுக்கு கிடை கொள்ளவில்லை.

மாமாவும் கூட ஒரு ஆளும் சேந்து குதிரைகளை ஆடுகளுடன் வந்து நாயக்கர் காட்டில் மேய்க்க விடுவர். மாமா குதிரைகளை விட்டு விட்டு போய் விடுவார். ஆள்காரணும் நாங்களும் ஆடுமாடுகளையும் குதிரைகளையும் மேய்த்துக் கொண்டு வீடு வருவோம்.

ஒரு வாரம் கழிந்து போது ஒரு நாள் ஆள்க்காரன் வரவில்லை. மாமா குதிரைகளை கொண்டு வந்து விட்டு விட்டு போய்விட்டார். குதிரைகள் குனிந்த தலை மாறாமல் மேய்ந்து கொண்டிருந்தனர். ரெண்டு பேருக்கும் பசி எடுத்ததால் சித்த உட்கார்ந்தோம். அந்நேரம் பார்த்து ரெண்டு மாடுகள் தலைப்போட்டுக் கொண்டன. பிரிப்பதற்கு சிறிது நேரம் ஆனது. பிரித்து விட்டு பார்த்த போது ஒரு குதிரையை காணவில்லை. சுத்தி துழாவியும் கிடைக்கவில்லை. பாண்டிதான் காட்டேரித் தோப்புக்குள் போயிருக்க வேண்டும் என்று சொன்னான்.

பாண்டிக்கு குதிரைக்கு எதாவது ஆகிவிடும் என்று உதறல் எடுத்தது. அவனே உள்ளே போய் வருவதாகவும் அவன் கருப்பராயன் காவல் தெய்வம் என்றும் ஒன்னும் செய்ய மாட்டார் என்றும் சொன்னான். ஆடுகளை மட்டும் பாத்துக் கொள்ளுமாறும் சொல்லி விட்டு போனான்.

அவன் போய் வெகுநேரம் ஆகியும் ஆளைக்காணவில்லை. எனக்கு பயமாகிவிட்டது. மாமாவைப் போய் கூட்டி வரலாம் என்றால் மிச்ச குதிரைகளையும் ஆடுகளையும் என்ன செய்வது ? உள்ளே போய் பார்த்து விடலாம் என்று தோன்றியது. யோசித்துக் கொண்டே உள்ளே போய் விட்டேன்

பெரிய வித்தியாசம் ஒன்றும் தெரியவில்லை. அங்கங்கே கள்ளுப் பானைகள் உடைந்து கிடந்தன. வவ்வால்களின் எச்சங்கள் பழங்களோடு கலந்து ஒரு புளித்த நாற்றம் அடித்தது. பழங்கள் விழுந்து முளைத்து கொத்து கொத்தாக நாற்று விட்டிருந்தது. ஒரு புதரை விலக்கிக் கொண்டு செல்கையில் திடீரென ஒரு ராட்சசன் வந்தது போல ஒரு மரம். ஒரு ஆலமரத்தை வேரோடு திருப்பி போட்டது போல் கிளைகள் அனைத்தும் படர்ந்து மேல் நோக்கி போயிருந்தன. அங்கங்கே கருப்பாய் பிசின் போல இருந்தது.

இரண்டு பனை மர வண்ணமும் அரை பனை வளர்த்தி உயர தண்டு, அதற்கு மேல் வணங்கா முடி போல கிளைகள். பார்ப்பதற்கு வேங்கை மரம் போல இருந்தாலும் இது வேங்கையில்லை.

எனக்கிருந்த இருந்த பய உணர்ச்சி சற்று குறைந்திருந்தது, ஆச்சர்யம் மேலே தூக்கியது. வெளியே இருந்த போது இந்த மரத்தின் பிராமாண்டம் தெரியவில்லை.

மரத்தை சுற்றி வந்தேன், சுற்றி ஆரம்பித்த எடத்திற்கு வந்த போது திடுக்கிட்டு கீழே விழப் போனேன். திடீரென பாண்டி குதிரையுடன் அங்கே நின்று கொண்டிருந்தான். குதிரையின் வயிற்றிலும் பாண்டியின் வாயிலும் ரத்தம் ஒழுகி கொண்டிருந்தது. எனக்கு மயக்கம் வந்தது.

கண்விழித்த போது மாமா எனக்கு விசிறிக் கொண்டிருந்தார். என்னை பார்த்து சிரித்தபடி “பயந்துட்டியா” என்றார். எனக்கு ஒன்றுமே புரியாமல் நடந்தது கனவா நினைவா என்று விழித்தேன். திக்கியபடி “ப் பா பாண்டி ” என்றேன்.

“அவனுக்கு ஒன்னும் இல்ல. அந்த மரம் ஆப்பிரிக்க ரத்தம் சிந்தி மரம். அதில் காயமானா ரத்தம் மாதிரி பால் வரும். அதில் தொங்கும் வவ்வால்கள் எல்லாம் சில சமயம் அந்த பால் பட்டு சிவப்பாகி விடும். அதை ரத்தகாட்டேரிகள்னு நினச்சு எல்லாரும் பயந்துட்டு இருக்காங்க. மரத்தையும் காட்டேரி மரமனு பெயர மாத்திட்டாங்க.”

“நீ வேணா உள்ள போய் பார்க்குறியானு” கேட்டார். நான் “வேண்டாம் வீட்டுக்கு போலாம்னு” சொன்னேன்.

அன்னைக்கு ராத்திரி எனக்கு நல்ல காய்ச்சல். பாட்டி ஒரே புலம்பல். மாமா பாட்டிய திருப்தி படுத்த மந்திரிச்ச கயிறு வாங்கி கொண்டு வந்தார். யாருக்குமே நடந்த விஷயம் தெரியாது. ஒரு வாரம் கழிந்து நான் கோயம்புத்தூர் வந்து விட்டேன்.

அடுத்த விடுமுறைல நான் போன போது பாண்டி அவங்க அப்பா கூட கறி வெட்ட போய்ட்டான். மாமாவும் வேற ஆள் போட்டுட்டார். நான் காலேஜ் முடிச்சு வேலைக்கு பெங்களூர் போன பின்னாடி இத பத்தி இணையத்தில துழாவிப் பார்த்தேன். அந்த மரம் உண்மைதான் “ஆப்ரிக்கன் ப்ளட்வூட் ட்ரீ” என்று போட்டிருந்தது. ஆனால் எதிலும் இந்த அளவுக்கு ரத்தம் வந்தது போல தோன்றவில்லை.

அடுத்தமுறை பாட்டி வீட்டுக்கு போன போது மரத்தை பார்க்க போனேன். அங்கே தோப்பைக் காணோம் வீட்டு மனை போட்டிருந்தார்கள். நான்கைந்து வீடுகள் ஆகியிருந்தன. முன்னாடி ஒரு கறிக்கடையும், எதிர்த்தால் போல் ஒரு டீக்கடையும் இருந்தன. கறிக்கடை பதினோரு மணிக்கு மேல் காத்துவாங்கி கொண்டிருந்தது. கறிக்கடைக்காரரிடம் போய் விசாரித்தேன்.

“இங்க இருந்த தோப்பு என்னாச்சுங்க? ”

என்னை நிமிர்ந்து பார்த்த அவர், ஊன்றி என் முகத்தை பார்த்து விட்டு

“என்னை தெரியலீங்களா” என்றார்

நான் விழித்ததை பார்த்து “நாந்தான் பாண்டிங்க” என்றார்.

“பாண்டி நல்லாருக்கியா, ஆளே மாறிட்டேயே.”

“நீங்க சவுக்கியமா, ஊர் பக்கமே வரதில்லையே” என்று குசலம் விசாரித்து முடிந்த பிறகு பாண்டி சொன்னான்.

“நாயக்கர் இந்த தோப்ப டவுனுகாரனுக்கு சைட்டு போட வித்துட்டாரு. பெரிய பெரிய மெஷினும் ஜெசிபியும் வந்துதான் வேலை நடந்தது.

நானும் ஊருக்காரர் மாறி மரத்த வெட்டுனா எதாவது நடக்கும்னு நினைச்சேன். ஒன்னும் நடக்கல. மத்தமரத்த எல்லாம் தோண்டி காட்டேரி மரத்தடியில போட்டு தீ வச்சிட்டாங்க. மரமே கருகி போச்சு. ஒரே வாரம் மொத்த எடமும் மட்டமாகி போச்சு.

ஆனா காக்காயும், குருவியும் வவ்வாலும் அழுத அழுகாச்சும் கத்துன கத்தலும் கொஞ்சம் இல்ல” என்ற போது மனம் கரைந்தது.

“அந்த எடத்துல ஏதோ தொட்டி கட்ட குழி எடுத்த அப்போ ஒரு கல்லு சிலை கிடச்சது. அது கருப்பராயன் சிலைனு சொல்லி உள்ளாரயே கோயில் கட்டிட்டாங்க. டவுனுக்காரன் மூளையே மூளை. மரம் வெட்டி வித்த காசுலயே போட்டத எடுத்துட்டானு சொல்றாங்க. ”

எனக்கு சப்பென்றெருந்தாலும் பாண்டி சொல்லி வந்த கதையிலாவது உண்மை இருந்ததை எண்ணி சற்று ஆறுதல் பட்டு பாண்டியிடம் விடை பெற்று பெங்களூர் திரும்பினேன்.

மனைவி என்ன சிந்தனை என்று என்னை நிகழ்காலத்துக்கு கொண்டு வந்தாள். இப்போது டிராக்குலா படம் ஓடிக்கொண்டிருந்தது. அப்போது என் பெண் அவள் என் பையனிடம் “ஹவ் கேன் ஏ டிராகுலா பிகம் ஏ ஹீரோ” என்றாள். அதற்கு அவன் “தெர் இஸ் குட் இன் ஈவில் டூ” என்றான்.

நான் காட்டேரி மரங்களையும் அதன் வவ்வால்களையும் நினைத்துக் கொண்டேன்.

​

​

notes/personal/stories/காட்டேரி_மரம்.txt · Last modified: by skvsree