notes:personal:stories:காதலும்-கம்யூனிசமும்---2

title: காதலும் கம்யூனிசமும் – 2 date: 2011-06-22T00:00:00.000Z categories:

  1. தொடர்-கதை

uuid: d7a33a2b-d6e4-49ca-b127-00b30a3dda69


1. விடுதலை

2. தேடல்

மூன்று மாதம் முடிந்து விட்டது.   பெரிய முன்னேற்றம் ஒன்றும் இல்லை.  இரண்டு மூன்று இயக்குனர்களை,  போய் பார்த்தான், நடிப்பை பார்க்காமலே திருப்பி அனுப்பினார்கள்.  ஒரு சிலர் பசையுள்ள இடம் என்று தெரிந்து கொண்டு, பணம் கறக்க முயற்சி செய்தார்கள்.  ஒரு சில நேரங்களில் ஊருக்கு திரும்பி போய் விடலாம் என்று கூட நினைத்தான், ஆனால் தன்மானம் தடுத்தது.

இந்த நிலையில் அவன் அப்பாவிடமிருந்து ஒரு கடிதம் வந்தது.  திருவல்லிக்கேணியில் 'தனபால்' என்பவரை போய் பார்க்கும்படி சொல்லியிருந்தார்.    தனபால் ஒரு வித்தியாசமான மனிதர்,  சில நேரங்களில் மெத்த படித்தவர் போல பேசினார், சில நேரங்களில் வெகுளி போலவும் பேசினார்.

“என்னோவோ இவ்வளோ தூரம் வந்துட்ட நானும் படம் நடிக்கிறனு, உங்க அப்பனாத்தா பத்தி நினைச்சு பார்த்தியா,  நானும் பத்து வருசத்துக்கு முந்தி கேமிராமேன் ஆகனும்னு நெனச்சு வந்தேன்.  இப்பவும் கேமிராமேன் தான் ஆனா 'வீடியொகிராபர்' அப்பிடினு தான் வெளில சொல்றாங்க.  பார்க்க ஹீரோ மாரிதான் இருக்க ஆனா, இப்பல்லாம் வாரிசுகதான் 'டக்'னு முன்னாடி வர முடியுது” என்று அவர் சோகத்தோடு என் சோகத்தையும் சேர்த்துக் கொண்டார்.

சோகத்தோடு சோகம் சேரும் போது சுகமாவது நட்பில் மட்டும்தான்.   அடுத்த மூன்று மாதங்கள் எப்படி போனது என்றே கணேசனுக்கு தெரியவில்லை.  சீட்டு கட்டு முதல் 'செஸ்' வரை புகுந்து விளையாடினார், தனபால்.  அதுவும் கையில் காசு இருந்து விட்டால், பார்ட்டிதான்.  கணேசனும் ஜாகையை அவர் ரூமுக்கே மாற்றிக் கொண்டான்.  அவருடன் சேர்ந்து கல்யாணங்களுக்கும் போக ஆரம்பித்தான். 'லைட்' பிடிப்பது, கேமிரா ரோல் மாற்றுவது, போன்ற எடுபிடி வேலைகளை பார்த்தான்.  பணம் கிடைத்ததோ இல்லையோ பந்தி சோறு கிடைத்தது.

அப்படி போன ஒரு கல்யாணத்தில் தான் அவளை பார்த்தான்.  வெளிர் மாநிறம், கூர் மூக்கு, பெரிய கண்கள் என காளிதாசன் போல சொல்லிக் கொண்டே போகலாம்.  ஆனால் அந்த பெண்ணை எங்கேயோ பார்த்தது போல இருந்தது.  இது பொதுவாக எல்லா ஆண்களுக்கும் தோன்றும் 'எங்கேயோ பார்த்த மாதிரி' கிடையாது.  உண்மையிலேயே தெரிந்த முகம் போல இருந்தது.

அவளை உற்று பார்த்துக் கொண்டிருந்த போது இரண்டு முன்று முறை பார்த்து விட்டாள், அதன் பின் அவளும் இவனை பார்ப்பது போல் இவனுக்கு தோன்றிற்று.  பெண்கள் பார்வையை கணிப்பது கடினம் என்பது இவன் கற்றுக் கொண்ட பால பாடம், அதனால் இவன் வேலையில் கவனத்தை செலுத்த முயன்றான்.

ஆனால் இவன் கவனம் சிதறிக் கொண்டே இருந்தது. அதன் விளைவுதான் மணமக்கள் மீது அடிக்க வேண்டிய 'லைட்டை' அய்யர் முகத்தில் அடித்து, தனபால் அண்ணணிடம், சென்ற அத்தியாத்தின் ஆரம்பத்தில் திட்டும் வாங்கினான்.

notes/personal/stories/காதலும்-கம்யூனிசமும்---2.txt · Last modified: by skvsree