uuid: c76554ea-ed91-4a3b-91a9-b831621af2d1 title: யான் பெற்ற அனுபவங்கள்
முன்னுரை
நீ என்ன பெரிய இவனா, அப்படி என்ன உனக்கு அனுபவம், வந்துவிட்டது. நீ நிலா கண்ட ஆர்ம்ஸ்ராங்கா? இல்லை, பத்தாயிரம் நாள் சிறை சென்ற நெல்சன் மண்டேலாவா, இல்லை பதினாயிரம் தலை கண்ட மகிந்தாவா, அரசியல்வாதியா, சாமியாரா, ஞானியா என்று கேட்பதும் நினைப்பதும் எனக்கு தெரிகிறது.
ஆனால் இந்த உலகில் உண்மையில் உலகானுபவமும்,லெளகிக சுவையும் தியாகிகளோக்கோ, துன்மார்க்கர்களோக்கோ, இயற்கையின் மர்மங்களையும், செயற்கை மகிழ்ச்சிகளையும் பணப்பித்தில் தேடித் திரியும் பணக்காரர்களுக்கோ, அல்லது நீங்கள் மேலே குறிப்பிட்டவர்களுக்கோ கிடைப்பதில்லை. ஏழைகளுக்கோ அவ்வப்போது கிடைக்கும் மகிழ்ச்சிகளும், நிரந்தர துன்பங்களும் இந்த உலகத்தையே மறக்க செய்து விடுகின்றன.
அப்படியானால் யார்தான் அந்த பாக்கியத்தை பெற்றவர்கள்? மாத ஆரம்பத்தில் கொண்டாட்டமும், மாத கடைசியில் திண்டாட்டமுமாக வாழ்க்கையை நடுத்துகிறானே நடுத்தர குடும்பஸ்தன், அவனை போல் துன்பத்தையும் இன்பத்தையும் சமமாக காண்பவர்கள் யாரும் இல்லை.
அப்படிப்பட்ட நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த அரசு உத்தியோகஸ்தன், அதுவும் கிம்பளம் வராத இலாகா. அப்படி என்ன வேலை? என்று கேட்கிறீர்களா, கோயமுத்தூர் ஜில்லாவில், 'முடி கொண்ட சோழ நல்லூர்' என்ற சிற்றூரில் 'பஸ் ஸ்டாண்ட்' 'டைம் கீப்பர்' ஆக 20 வருடமாக வேலை. வேலை ஒன்றும் கஷ்டமான வேலை இல்லை, ஆனால் வருமானந்தான் குறைவு, பூர்வீக நிலம் இரண்டு காணி இருந்தது அதனால் குடும்ப வண்டி ஓடியது.
ஊர் பேரை வைத்தே வரலாற்று சிறப்பு மிக்க ஊர் என்று புரிந்திருக்கும். ஆனால் இந்த ஊருக்கு இன்னும் ஒரு சிறப்பு இருக்கிறது. இது கோடை வாசஸ்தலங்கள் சூழ்ந்த ஊர் அதனால், வெளியூர்களில் இருந்து வரும் கூட்டம் அதிகம். அது போல சினிமா சூட்டிங்குகளும் உண்டு. இதனால் இந்த ஊரின் ஒரே டைம் கீப்பரான எனக்கு பல விதமான மனிதர்களையும், அவர்கள் மூலமாக வித்தியாசமான அநுபவங்களையும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பை தந்தது.
அந்த காலத்தில் அரசர்களும், மந்திரிகளும் மக்கள் மனதை தெரிந்து கொள்வதற்காக, பல விதமான மாறு வேடங்களில் சுற்றுவராம், ஆனால் அந்த அனுபவம் எனக்கு இலவசமாகவே கிடைத்து வந்தது. பருப்பஞ்சோற்றை எவ்வளவு பக்குவமாக சமைத்தாலும் அதில் நெய் ஊற்றினால் தான் மணம், அது போல என் அனுபவங்களோடு, சுவையை கூட்ட கற்பனைகளையும் கொஞ்சம் சேர்த்து எனக்கு ஞாபகத்தில் உள்ளபடி உங்கள் முன் வைக்கிறேன்.
1. ரேடியோக்காரர் 2. குமாரி மோனா
