title: காதலும் கம்யூனிசமும் – 4 date: 2011-07-13T00:00:00.000Z categories:
- தொடர்-கதை
uuid: 868872f2-325d-4982-b61b-434e97303b9d
4. இரட்டையர்கள்
கணேசன் 'சாமா' என்னும் 'சுவாமி நாதனை' பற்றி நினைத்துக் கொண்டிருக்கும் போது, அதே சாமாவுடன் 'கல்யாணி' பேசிக் கொண்டிருந்தாள். “நம்ம கணேசனை, இங்கே பார்த்தேண்டா 'சாமா', ஆளே கறுத்து போய், உருக்குலைஞ்சு காண சகிக்கலே”, “என்னடா ஆச்சு, வீட்லே ஏதாவது பிரச்சனையா?”.
அதற்கு சாமா மழுப்பினான் “நேக்கு என்ன தெரியும், அவன் ஏதோ 'ஹீரோ' ஆகுரேனுட்டு இங்கேயிருந்து ஓடிட்டான்”, “ஊருக்குள்ளே அவனுக்கும் அவன் தகப்பனாருக்கும், ஏதோ மனஸ்தாபம்னு பேசிக்கறா”.
“என்னடா இப்படி சொல்றே, நீயும் அவனும் சின்ன வயசிலே இருந்து 'பிரெண்ட்ஸ்' ஆச்சே”, என்று கேட்டாள். “என்னமோ எல்லாம் பெரிய எடத்து சமாச்சாரம், நான் இப்ப பெரிசா 'டச்'லே இல்லே, அத விடு உன் புரட்சி, சமாச்சாரம் எல்லாம் எப்படி இருக்கு” என்று மேலும் மழுப்பி பேச்சை மாற்றினான்.
கல்யாணிக்கு மனசு சமாதானமாக வில்லை அவன் கேட்டதற்க்கு பதில் சொல்லாமல், “சரி விடு நான் மாமாவிடம் பேசிக் கொள்கிறேன்” என்று கூறி இணைப்பை துண்டித்தாள்.
கல்யாணியும் சாமாவும் இரட்டையர்கள். அவர்கள் தந்தையார் 'ஈஸ்வர' அய்யர், 'நெடுமுத்தூர்' 'சினங்கொண்ட ஈசன்' கோயிலில் பூசை செய்து வந்தார். 'வேதம்' சொல்லி கொடுப்பவரானாலும் முற்போக்கு சிந்தனை கொண்டவர். அவர் சிறு வயதில், பாரதியை போல முறுக்காகவே சுற்றி வந்தார். ஆனால் அவருக்கு வாய்த்தது 'செல்லம்மா' இல்லை.
'மனைவி அமைவதெல்லால் இறைவன் கொடுத்த வரம்' என்பார்கள். அவரும் நமக்கு இறைவன் கொடுத்தது வரமா இல்லை சாபமா என்று ஆராயாமல், அவர் வாழ்ந்து வந்த குறுகிய மனம் கொண்ட 'அக்கிரகாரத்தோடும்' 'உலகோடும்' எந்த வித 'முட்டுதலும்' இல்லாமல், 'சாது'வாக வாழ்ந்து வந்தார். அவர் மனம் விட்டு பேசக் கூடிய ஒரே நபர் கணேசனின் தந்தை 'ரத்தினம்' மட்டுமே.
ஒரே சிந்தனை கொண்ட இந்த இருவரின் நட்பு மேலும் வலுவானதற்கு கல்யாணியும் ஒரு காரணம். 'ஈஸ்வர' அய்யருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்து ஒரு வருடம் போது 'ஆண் பெண்' இரட்டையாய் பிறந்தால், ஊருக்கு ஆகாது என்று 'அக்கிரகார' பெரிய மனிதர்கள் கருதின காரணத்தால், பெண் குழந்தையை சந்நியாசி மடத்தில் சேர்த்து விடும்படி தீர்ப்பு எழுதினர், அதற்கு 'ஈஸ்வர' அய்யர் தெரிவித்த எதிர்ப்பு அவர் மனைவியின் முன் புகையாய் போனது.
ஆனால் நல்ல சமயத்தில் கணேசனின் தந்தை தலையிட்டு அந்த குழந்தையை காப்பாற்றி, 'சென்னை' அனுப்பினார். அன்று முதல் கல்யாணிக்கு ஆகும் செலவுகள் அனைத்தையும் முதலியாரே கவனித்துக் கொண்டார். இதனால் 'ஈஸ்வர' அய்யர், முதலியாரிடம் நட்பு மட்டுமல்ல நன்றியும் பாராட்டி வந்தார்.
இப்படி ஒரு சகோதரி 'சாமா' விற்கு இருப்பதும், அவள் ஏதோ காரணத்தால் வேறு எங்கோ வளர்ந்து வருவதும் 'கணேசனுக்கு' தெரிந்து தான் இருந்தது, ஆனால் அவளை அவன் பார்த்தது இல்லை, அவளுக்கு எப்படி அவனை தெரிந்தது என்பது அவனுக்கு புரியாத புதிராகவே இருந்தது.
அவளை அடுத்த முறை பார்க்கும் போது அதை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். ஆனால் அவன் அவளை அடுத்த முறை பார்க்கும் போது அவள் கேட்ட கேள்விகளுக்கு விடை தெரியாமல் விழிக்க போவதை அவன் அறியவில்லை.
