title: யான் பெற்ற அனுபவங்கள் - ரேடியோக்காரர் date: 2011-07-14T00:00:00.000Z categories:
- கட்டுரை
- தொடர்-கதை
uuid: f6c03302-8c5f-40f9-800c-db3a9546c77d
ரேடியோக்காரர்
எங்கிருந்து வந்தார் என்று தெரியாது, 15 வருடம் இருக்கும். ஒரு நாள் காலை 8 மணி இருக்கும், அப்போது தான் கவனித்தேன். என் கூண்டுக்கு எதிரே ஒரு காலி பெஞ்சை முழுவதுமாக ஆக்கிரமித்து கொண்டிருந்தார். வட்ட முகம், மூன்று நாளாக மழிக்காத தாடி, கட்டம் போட்ட லுங்கி, அழுக்கு சட்டை, இரட்டை நாடி உடம்பு. அவரை சுற்றி இரண்டு, மூன்று இரும்பு பெட்டி, ஒரு அட்டை பெட்டி. அந்த அட்டை பெட்டியை பிரித்துக் கொண்டிருந்தார்.
எல்லாவற்றையும் நான் 'ஆபீஸ்' கூண்டுக்குள் இருந்து பார்த்துக் கொண்டு இருந்தேன். உள்ளே இருந்து ஒரு வினோதமான சாதனத்தை எடுத்தார். அது ஒரு 'கேசட் பிளேயர்', அதில் வினோதம் என்னவெனில் அதில் இருந்த ஸ்பீக்கர்கள், பெரிதாக கூம்பு வடிவத்தில் சின்ன ஒலிபெருக்கிகள் போல் இருந்தன. அதன் பக்கவாட்டில் தையல் மெஷின் சக்கரம் இருந்தது.
அந்த விளிம்பின் ஓரத்தில் அதை சுற்றுவதற்கு வசதியாக ஒரு சின்ன கைப்பிடி 'வெல்டு' பண்ணி இருந்தது. அவர் முழுவதுமாக எடுத்து வைத்து, அதன் முன் 'ஆர்மோனியம்' வாசிப்பவர் போல் உட்கார்ந்து கொண்டார். காலை நேரமாதலால், அலுவலகத்துக்கு செல்லும் கூட்டம் இவரை சற்று நேரம் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு சென்றது.
சில 'பஸ் ஸ்டாண்டு' வாசிகள், அங்கேயே நின்று கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். பக்கவாட்டில் இருந்த கைபிடியை பிடித்து வேகமாக சுற்றினார், சுற்ற சுற்ற ஒரு விளக்கு பிரகாசமாக எரிந்தது. அது பிரகாசமானவுடன், சுற்றுவதை நிறுத்தினார். பின் ஒரு இரும்பு பெட்டியை திறந்தார், உள்ளே இருந்து ஒரு கேசட்டை தூசு தட்டி எடுத்து, ரிக்கார்டரில் போட்டார். 'தமிழ்த் தாய்' வாழ்த்து ஒலித்தது.
இப்போது அனைவரும் இங்கே பார்க்க தொடங்கினர். அவரோ தியானத்தில் இருப்பவர் போல கண்களை மூடி உட்கார்ந்து கொண்டிருந்தார். 'தமிழ்த் தாய்' வாழ்த்து முடிந்தவுடன் பக்தி பாடல்கள் ஒலித்தன. அவர் கண்ணை திறக்கவே இல்லை, கைகள் மட்டும் அவ்வபோது சக்கரத்தை சுற்றி விட்டன.
கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்த கூட்டம் இப்போது கலைய ஆரம்பித்தது. சில புண்ணியவான்கள் கையில் இருந்த சில்லரைகளை அவர் முன் போட்டு விட்டு சென்றனர்.இப்போது மக்கள் பக்கத்தில் நின்று கேட்காவிட்டாலும், அவரவர் இடத்தில் நின்று கேட்டுக் கொண்டிருந்தனர். சிலர் பக்கத்தில் வந்து காசு போட்டு விட்டு சென்றனர். அந்த கேசட் முடிந்தவுடன் அடுத்த கேசட் ஜனரஞ்கமாக பாடியது, அப்படியே இரவு 7 மணி வரை பாடியது.
தினமும் அந்த புது மனிதருக்கு ரசிகர் கூட்டம், அதிகம் ஆயிற்று, வரும்படியும் அதிகம் ஆயிற்று. அப்போது 'சிலோன்' 'ரேடியோ' வில் மட்டுமே பாட்டு கேட்டு பழக்கப்பட்ட பட்டிகாட்டு மக்களுக்கு, இதுவும் ஒரு 'ரேடியோ'வாக தெரிந்தது. அதனால் 'ரேடியோக்காரர்' என்றே அவரை கூப்பிட ஆரம்பித்தனர்.
ஒரு வாரம் சென்றிருக்கும், அன்று பெளர்ணமி, இரவு நான் கூட்டம் குறைந்த பின் வழக்கம் போல என் இருக்கையில் சாய்ந்து, 'ஜு.வீ'யை புரட்டி கொண்டிருந்தேன். அப்போது 'ஆஹா இன்ப நிலாவினிலே' என்று 'கண்டஸாலா' பாடினார். நான் வெளியே வந்து பார்த்த போது, அவர் அது வரை திறக்காத ஒரு இரும்பு பெட்டி திறந்திருந்தது. அதில் அந்த கால ரெக்கார்ட் பிளேயர் இருந்தது, அதனருகில் பத்து பதினைந்து பழைய ரெக்கார்டுகள் கிடந்தன. நான் அவர் அருகில் போய் உட்கார்ந்து கொண்டேன்.
நான் 'ட்யூடி' யில் சேர்ந்து இத்தனை வருடத்தில் எனக்கு வேலையை தவிர பாடல் கேட்பது ஒன்று தான் பொழுது போக்கு, அதுவும் 'ஏ.எம்.ராஜா','எம்.எஸ்.வி', 'கண்டஸாலா' என்றால் உயிர். ஆனால் 'ரேடியோக்களில்' அவ்வளவு பழைய பாடல்கள் வருவதில்லை. ஆனால் இறைவன் கொடுத்த வரப்பிரசாதமாக 'ரேடியோ'க்காரர் வந்து சேர்ந்தார்.
அன்று முதல், அவரிடம் இருந்த கேசட்கள் பொது மக்களுக்காக 7 மணி வரை பாடும். ஆனால் அதற்கு பின் அவர் தனியாக வைத்திருந்த அந்த கால 'ரெக்கார்ட்'கள் எனக்காகவும் அவருக்காகவும் பாடும். அவர் எந்த ஊர், இதற்கு முன்னால் என்ன செய்து கொண்டிருந்தார் என்று எதுவுமே நான் கேட்டதுமில்லை. அவரும் சொன்னதும் இல்லை. இருவரும் அதிகம் பேசிக்கொண்டது கூட இல்லை.
'சுசீலாவும்', 'சீனிவாசும்', 'ஜிக்கியும்', 'லீலாவும்', 'ராஜாவும்' எனக்கு தாலாட்டு பாடினர். நான் வீடு செல்லும் நேரம் ஒன்பது மணியில் இருந்து பத்து மணியாகியது, சில நாட்கள் பாட்டு கேட்டுக் கொண்டே கூண்டிலேயே தூங்கி விடுவதுண்டு.
அவர் அதிகமாக அவர் இடத்தில் இருந்து நகர்வதில்லை. அந்த 'பெஞ்சே' அவரது உறைவிடம் ஆனது. கொஞ்சம் பணம் சேர்ந்தவுடன் அவர் கோவை செல்லும் வண்டிகளில் கேசட்டுகள் வாங்கி வருமாறு சொல்லி அனுப்புவார். அதை தவிர அவர் யாருடனும் அதிகம் பேசுவதில்லை. என்னை பார்த்து புன்னகைப்பதோடு சரி. 'எலக்ட்ரானிக்' வேலைகளில் கை தேர்ந்தவராக இருந்தார். அவரது கேசட் பிளேயரே அதற்கு சான்று, அது போக என் 'ஒயர்லெஸ்ஸை' கூட ஒரு முறை சரி செய்து கொடுத்தார்.
சில சமயங்களில் இங்கே சொல்லுவதை காட்டிலும் நேரம் வேகமாக போவதுண்டு, அப்படி 5 ஆண்டுகள் ஓடிய போதும் எங்கள் இசையார்வமும், வினோத நட்பும் மாறவில்லை. ஆனால் காலம் மாறிக் கொண்டிருந்தது, 'ஜே எல் பேர்ட்' கண்டு பிடித்த தொலைகாட்சி என்னும் கரிய பூதம் எங்கள் 'பேருந்து நிலையதிற்கு' வந்து சேர்ந்தது. இதனால் 'ரேடியோகாரருக்கு' மவுசு குறைய ஆரம்பித்தது, வருமானமும் பாதிக்க பட்டது, ஆனால் அவர் மனம் சோரவில்லை, பாடல் ஒலிப்பதும் நிற்கவில்லை, இரவில் மட்டும் பாடல்களில் சோகம் அதிகமாக தொனிக்க ஆரம்பித்தது.
ஒரு மாதம் சென்றிருக்கும், வருமானம் இல்லாததால் உடல் இளைத்து விட்டது, பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தார், வறுமையை விட அவருக்கு மனப்போராட்டம் அதிகமாக இருப்பதாக பட்டது. மனசு கேட்கவில்லை. பாய் கடையில் ஒரு பிரியாணி பொட்டலம் வாங்கி கொண்டு அவர் அருகில் சென்று உட்கார்ந்தேன்.
சோர்வோடு படுத்திருந்தார், கண்கள் குழி விழுந்து போயிருந்தன, எழுப்பி சாப்பிட வைத்தேன். தயங்கி கேட்டேன், “உங்களுக்குத்தான் இந்த 'ரிப்பேர்' வேலையெல்லாம் தெரியுமில்ல, அதை வைச்சு ஒரு கடை போட்டா என்ன?” என்றேன். நிமிர்ந்து என்னை பார்த்தார், “என் பிரெண்டு ஒருத்தன் 'எலக்ட்ரானிக்ஸ்' கடை வச்சிருக்கான், அவன்கிட்ட சேர்த்தி விடவா' என்று கேட்டேன். அவர் கண்கள் கலங்கின, ஒரு வெறுமையான சிரிப்பு சிரித்தார். பின் எதுவும் பேசவில்லை அப்படியே சுருண்டு படுத்துக் கொண்டார்.
அடுத்த நாள் என் 'மச்சினனின் மாமனார்' வீட்டில் ஒரு 'சாவு', அதற்கு போய் விட்டு வேலைக்கு வருவதற்கு மதியம் ஆகிவிட்டது. நான் வந்த போது என் மேஜையில் ஒரு சீட்டு வைத்திருந்தது, எடுத்து பார்த்தால் 'நன்றி' என்று எழுதியிருந்தது. எட்டி பார்த்தேன் 'ரேடியோக்காரரை' காணவில்லை. தொலைக்காட்சியில் 'எஸ்.பி.பி' 'நண்பன் போட்ட சோற்றை' பற்றி பாடிக்கொண்டிருந்தார்.
